குடிநீர் தடையின்றி வழங்க வார்டு தோறும் பொறுப்பான அலுவலர் – சட்ட மன்றத்தில் அமைச்சர் வேலுமணி தகவல்

தமிழ்நாட்டில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவுவதால் மாநகராட்சி பகுதிகளில் வார்டுகள் தோறும் குடிநீர் வழங்கும் பணியை மேற்பார்வையிட அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சட்டமன்றத்தில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் வேலு மணி தெரிவித்துள்ளார்.

குடிநீர் பிரச்சனைக்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சட்டமன்றத்தில் இன்று திமுக உறுப்பினர் பிச்சாண்டி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

தமிழக வரலாற்றில், கடந்த 140 வருடங்களில் இல்லாத வகையில், இந்த வருடம், பருவமழை பொய்த்து, 62 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. அதன் காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, முதலமைச்சரின் தலைமையிலும், எனது தலைமையிலும், பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசு, தமிழகத்தில் நகர் புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, 976 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், பழைய ஆழ்துளை கிணறுகளை புனரமைத்தல், சிறு மின்விசை பம்புகள் மற்று கைப்பம்புகள் அமைத்தல், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல், பிளாஸ்டிக் தொட்டிகள் நிறுவுதல், பழுதடைந்த மோட்டார்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை, போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அம்மா அவர்கள் எடுத்த தீர்க்கதரிசனமான நடவடிக்கையின் காரணமாக, நாளொன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. 2016ஆம் ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் காரணத்தாலும், கிருஷ்ணா நதி நீர்வரத்து குறைந்ததாலும், நீராதரங்களில் இருப்பு மிகவும் மோசமான நிலை அடைந்துள்ளது.

சென்னை மாநகர மக்களுக்கு, ஏரிகள், கிருஷ்ணா நதி நீர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள், வீராணம் திட்டம், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளின் நிலத்தடி நீராதாரங்கள், பூண்டி மற்றும் தாமரைப்பாக்கம் கிணற்றுத் தளங்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

வருகிற மே மாதத்தில் சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளில் நீர் வற்றிப்போகும் சூழ்நிலையை எதிர்பார்த்து, வறட்சி நிவாரணப் பணிகள் சுமார் 100 கோடி மதிப்பீட்டில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையைத் தவிர்த்து இதர பகுதிகளில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் 553 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம், 4.21 கோடி மக்கள் பயன்பெறும் வகையில், நாளொன்றுக்கு 1,565 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்துத் தலைமை நீர்த்தேக்க மையங்கள், தலைமை நீர் உந்து மையங்கள், நீரேற்று மையங்களை நல்ல முறையில் பராமரிக்கவும், ஆணையர்கள், மாநகராட்சி பொறியாளர்கள், நகராட்சி பொறியாளர்கள் ஆகியோர் தங்கள் பகுதிகளில் உள்ள வார்டுகளுக்கு ஒரு பொறுப்பான அலுவலரை நியமனம் செய்தும்,

அன்றாடம் குடிநீர் வழங்கல் பணிகளை காலை 6 மணி முதல் நேரில் ஆய்வு செய்தும், மாலையில் அனைத்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டும், குடிநீர் வராத பகுதிகளுக்கு குடிநீர் வழங்க அனைத்து அலுவலர்களும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழாய் மூலம் குடிநீர் செல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இன்று உலக தண்ணீர் நாள். இந்த நாளில் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது தொகுதியில் உள்ள பொது மக்களை சந்தித்து, குடிநீரை வீணாக்காமல் சிக்கனமான முறையில் குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உங்கள் அனைவரையும் மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!