பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகன சாகசத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை..

தென்காசி மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இது போன்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களில் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தென்காசி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் அச்சன்புதூர், இலத்தூர், செங்கோட்டை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் பள்ளி, கல்லூரி பகுதிகளில் பிறரின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வகையான இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் பிறர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தும் சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து பிற இளைஞர்களுக்கு தவறான முன் உதாரணமாகவும் மற்றும் எடுத்துக்காட்டாகவும் அமையும் விதமாக தொடர்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்த வடகரை கீழத்தெருவை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரின் மகன் முகம்மது ஆசிக் (21), வடகரை ரஹ்மானியாபுரம் மேலத்தெருவை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவரின் மகன் ஷேக் ஒலி(25) ஆகியோர் மீது அச்சன்புதூர் காவல் நிலையத்திலும் மற்றும் புளியரை கொல்லம் மெயின் ரோட்டை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மகன் கௌதம் கிருஷ்ணா (24) என்பவர் மீது இலத்தூர் காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். செங்கோட்டை காவல் நிலையத்தில் கலங்காத கண்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் பரத்குமார் (26) என்பவருக்கு மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதாக ரூபாய் 11,000 அபராதம் விதிக்கப்பட்டு அவரின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, மேற்படி நபரை எச்சரித்து அனுப்பப்பட்டது. இதேபோல் அச்சன்புதூர் காவல் நிலையத்தில் 18 வயதிற்குட்பட்ட இரண்டு சிறுவர்களும் மேற்படி விதிமீறலுக்காக அவர்களின் பெற்றோரின் முன்னிலையில் எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களில் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!