அரசியல் வாதிகள் கார் கதவுகளை போலீஸ் திறப்பதா?; டிஜிபி தேவாரம் எழுதிய நூலில்..

தமிழக முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம், தம் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் குறிப்புகள் பற்றிய நூல் ஒன்றினை எழுதியுள்ளார். “மூணாறிலிருந்து மெரினா வரை” எனும் தலைப்பில் எழுதிய அந்த நூலில் “அரசியல்வாதிகள் கார் கதவுகளை போலீஸ் திறப்பது சரியில்லை” என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் டிஜிபி வால்டர் தேவாரம். அவர் எழுதிய புத்தகங்கள் நூலகங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வால்டர் தேவாரம் என்ற பெயரைக் கேட்டாலே கூன் விழுந்த முதுகும் நிமிர்ந்து நேராகும். இந்திய காவல்துறைக்கு அவர் ஒரு உதாரணம். தமிழக காவல்துறையின் பெருமை வால்டர் தேவாரம்.

கொரோனாவில் உலகமே முடங்கிக் கிடந்த காலகட்டத்தில் தனது நேரத்தை வீணாக்காமல் தம் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை சுமார் 80 ஆண்டு குறிப்புகளை புத்தகமாக எழுதியுள்ளார். “மூணாறிலிருந்து மெரினா வரை” என்ற அவரது பயண நூல் விறுவிறுப்பாக நகர்கிறது. ஆங்கிலம் மற்றும் தமிழில் அற்புதமாக உருவாகியுள்ளன. வால்டரின் வாழ்க்கை முறை, நேர்மை, கடமை தவறாமல், எதற்கும் அஞ்சாமை, தவறுகளை ஒப்புக்கொள்ளல், வீரப்பன் வேட்டை, நக்சல் ஒழிப்பு, என்கவுண்டர்கள், காக்கிச்சட்டை மீதான காதல், மேலதிகாரிக்கே சவால், பயமற்ற வாழ்வு, ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனம் என புத்தகம் வாசிக்க எவருக்கும் பிடிக்கும் படி எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா சந்திப்புகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

காமராஜரின் ஆட்சி, அண்ணாவின் ஆட்சிக் காலம், முன்னாள் அமைச்சர் கக்கன் பற்றி தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். விடுதலைப்புலிகள் பற்றி விரிவாக பல விஷயங்களை எழுதியுள்ள வால்டரின் இந்த புத்தகம் காவல்துறையில் உள்ள ஒவ்வொருவரும் படித்து பத்திரப்படுத்த வேண்டிய விஷயம். இறப்பதற்கு முன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சொன்ன கடைசி வார்த்தை, சோனியாவின் கண்ணீர் தம்மை கலங்க வைத்ததை விவரித்துள்ளார். கும்பகோணம் மகாமகம் சம்பவம், ராஜிவ் கொலை ஆகியவற்றிற்கு மிகவும் வருத்தப்பட்டுள்ளார். தமது அன்பு மனைவி பிரேமா, மகள் அனிதா, போலீஸ் நண்பர்கள், தம் மனம் கவர்ந்தவர்கள், மதிப்பிற்குரியவர்கள் பற்றியும் எழுதியுள்ளார்.

பல அரிய புகைப்படங்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. லஞ்ச லாவண்ய அமைச்சர்கள் சிலர் பெயரையே அவர் குறிப்பிட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. தமிழக டிஜிபியாக பதவி வகித்த போது ஒரு போலீஸ் எஸ்.பி. தமது கார் கதவை திறக்க முயன்று தோற்றத்தை வித்தியாசமாக விவரித்துள்ளார். அரசியல்வாதிகள் கார் கதவுகளை போலீஸ் திறப்பது சரியில்லை என்கிறார். வீரப்பன் வேட்டையில் நாளொன்றுக்கு 50 முதல் 100 அட்டைப் பூச்சிகளை ஷூ மற்றும் சாக்ஸிலிருந்து அகற்றியதை நினைவு கூறுகிறார். போலீஸ் துறையையும் ஒவ்வொரு போலீசையும் அவர் எவ்வளவு மதிக்கிறார் என்பதனை அவர் எழுத்துக்கள் நமக்கு புரிய வைக்கின்றன.

வீரப்பன் சம்பவத்திற்கு பின் தனக்கு பாதுகாப்பு தரப்பட்டதை வேண்டாம் என மறுத்ததையும், டிஜிபியாக பதவி நீட்டிப்பை மறுத்துவிட்டதையும், ஓய்வு பெற்றபின் பல தனியார் துறைகள் தம்மை பயன்படுத்திக் கொள்ள அனுகியதை மறுத்து விட்டதையும் காரண காரியங்களோடு விவரிக்கிறார். வால்டரின் முறுக்கிய மீசை, முரட்டு குணம் என தெரிந்தவர்கள் அவரது நூலை படித்தால் அவரது அன்பு, கருணை, உதவும் குணம் புரியும். வால்டரிங் நூல், பொது நூலகங்கள், கல்லூரி, பல்கலைக்கழக நூலகம், கிராமப்புற நூலகங்களில் இடம்பெற விரும்பினால் பூ. திருமாறன், சமூக நல ஆர்வலர், வெங்காடம்பட்டி- 627415, கடையம் (வழி) தென்காசி மாவட்டம் என்ற முகவரிக்கு எழுதலாம். மேலதிக விவரம் அறிய 7373737489 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!