ஒன்றிய அரசின் வக்ஃப் சட்ட திருத்தத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக் கூட்டம்..

ஒன்றிய அரசின் வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து தென்காசியில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில், தென்காசி எம்பி மற்றும் எம்எல்ஏக்கள், நகர்மன்ற தலைவர்கள், அரசியல் கட்சிகளின் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று கண்டனத்தை பதிவு செய்தனர். தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து கண்டன பொதுக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் தென்காசி கொடி மரத்திடலில் உலமா சபை மாவட்ட தலைவர் எம்.எச். சம்சுதீன் ஹஜ்ரத் தலைமையில் நடந்தது. இதில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்ட திருத்தத்தை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டது.

கூட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் எம்.அப்துல் அஜீஸ், உலமா சபை வட்டார நிர்வாகிகள் தென்காசி வட்டாரம் கே.கே.யு காதர் வலி முஸ்தபா ஆலிம், கடையநல்லூர் வட்டாரம் அஹமது மீரான் ஆலிம், செங்கோட்டை வட்டாரம் ஏ.எம் அபூபக்கர் ஆலிம், புளியங்குடி வாசுதேவநல்லூர் வட்டாரம் அருளாட்சி அப்துல் ரஹீம் ஆலிம், சுரண்டை வட்டாரம் அப்துல் ரஹீம் ஆலிம், சங்கரன்கோவில் வட்டாரம் அப்துல் கனி ஆலிம், கடையம் வட்டாரம் எம்.ஹெச்.பக்ருதீன் ஆலிம், முஸ்லிம் லீக் தென்காசி நகரத் தலைவர் என்.எம் அபூபக்கர், கடையநல்லூர் பேட்டை ஜமாத் கமிட்டி தலைவர் எம்.செய்யது இப்ராஹிம், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலமா சபை தென்காசி வட்டார செயலாளர் எம்.சம்சுதீன் ஆலிம் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளரும், தென்காசி மாவட்ட அரசு காஜியுமான ஏ.ஒய் முஹ்யித்தீன் ஹஜ்ரத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

 

கூட்டத்தில் தென்காசி எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜா எம்எல்ஏ, தென்காசி எம்எல்ஏ எஸ்.பழனி நாடார், தென்காசி மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் வி.டி.எஸ்.ஆர். முகமது இஸ்மாயில், தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர். சாதிர், ம.ம.க. மாவட்ட தலைவர் ஏ. நயினார் முஹம்மது, எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் திவான் ஒலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல துணைச் செயலாளர் சித்திக், முஸ்லிம் லீக் விவசாய அணி மாநில செயலாளர் எம்.முகமது அலி, கடையநல்லூர் பேட்டை பள்ளிவாசல் தலைமை இமாம் கே.ஐ. சாகுல் ஹமீது வாஹிதி, தென்காசி பஜார் பள்ளிவாசல் இமாம் அப்துல் ஜப்பார் ஆலிம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

 

பொதுக் கூட்டத்தின் இடையே கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இறுதியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் நெல்லை கே.ஜே. அப்துல் மஜீத் கண்டன உரையாற்றினார். முடிவில் மாவட்ட உலமா சபை பொருளாளர் ஆர் முகமது ரபீக் ஆலிம் நன்றி கூறினார். தென்காசி வட்டார பொருளாளர் ஜி.ஏ.குலாம் தஸ்தகீர் ஆலிம் துஆ ஓதினார். அதன் பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

அண்மையில் ஒன்றிய அரசு நிறைவேற்றி உள்ள வக்ஃப் திருத்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வழிபாட்டு உரிமைகளுக்கும், தனி மனித உரிமைகளுக்கும் எதிரானது. இந்திய முஸ்லிம்களை வேட்டையாடும் கெடு நோக்கம் கொண்டது; முஸ்லிம்களைத் தனிமைப் படுத்துவதை இலக்காகக் கொண்டது என்று உறுதியாக நம்புகிறோம். இச்சட்டத்தைக் கொண்டு வந்ததற்கு ஒன்றிய அரசு கூறும் காரணங்கள் ஏற்கத்தக்கவை அல்ல. குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் தடை சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து என சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ந்து சட்டங்களை இயற்றி வரும் ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.

 

தமிழ்நாடு சட்ட மன்றத்தில், வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தீர்மானத்தை ஆதரித்த எதிர்க்கட்சிகளுக்கும், உளங்கனிந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தீர்மானம், ஃபாசிசத்திற்கு எதிரான தத்துவப் போரில் வெற்றிக் கனியைப் பறிப்போம் என்கிற புதிய நம்பிக்கையை இந்திய மக்களின் இதயங்களில் விதைத்துள்ளதை எண்ணி பெருமகிழ்வு கொள்கிறோம்.

 

இத்தீர்மானத்தை பாஜக அல்லாத எல்லாக் கட்சிகளும் ஆதரித்துள்ளதன் மூலம், தமிழ்நாட்டில், பாஜகவை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டி இருக்கிறது. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தமது சட்ட மன்றங்களில் இது போன்ற தீர்மானங்களை இயற்றுவதோடு இதுபோன்ற கருப்புச் சட்டங்களை எங்கள் மாநிலங்களில் நாங்கள் செயல்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்.

 

மக்களாட்சி தத்துவமும், மதச் சார்பின்மையும் பேராபத்துக்கு ஆளாகி நிற்கும் இந்த நெருக்கடியான சூழலில், சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் ஃபாசிசப் போக்கினைக் கண்டித்து பாராளுமன்றத்தில் துணிச்சலாக மாபெரும் கருத்துப் போர் ஒன்றை நடத்தி, இந்திய மக்களின் மன சாட்சியாக எதிரொலித்த I.N.D.I.A கூட்டணி உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், தனி நபர்கள் ஆகியோருடைய முயற்சிகளை வெகுவாகப் பாராட்டுகிறோம். இவ்வழக்கில் தேவையான ஒத்துழைப்புகளை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் சட்டக்குழு வழங்கும். ஆன்மீகத்தின் தொட்டிலாகவும், அறநெறிகளின் சோலையாகவும் திகழ்ந்து வந்த இந்திய தேசத்தை, மதவெறியின் வேட்டைக்காடாக மாற்றும் வண்ணம், சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புப் பரப்புரையை நிறுவனமயப்படுத்தி, குடிசைத் தொழில் போல அதை நாடெங்கும் நிறுவி நடத்தி வருகின்ற பாசிச அமைப்புகளின் தீய கரங்களிலிருந்து சிறுபான்மை மக்களை காப்பாற்ற எல்லா மாநில அரசுகளும் சிறப்புச் சட்டங்களை இயற்ற வேண்டும்.

 

சமூக ஊடகங்களிலும், அரசியல் மேடைகளிலும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்புப் பரப்புரை செய்து, சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து, மக்கள் மனங்களில் நஞ்சை விதைத்து, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் தீய சக்திகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஏதுவாக சிறப்புப் புலனாய்வுப் பிரிவு ஒன்றை மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என்று கவலையோடும் அக்கறையோடும் வலியுறுத்துகிறோம். என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் 13.04.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்டது.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!