இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதையொட்டி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் மற்றும் இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் பார்வையாளர் (பொது) பண்டாரி யாதவ் ஆகியோர் தலைமையில் வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி இன்று (20.04.2024) நடைபெற்றது. இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம்- 338, பரமக்குடி (தனி) -303, முதுகுளத்தூர்- 386, திருவாடானை -347, திருச்சுழி- 276, அறந்தாங்கி-284 என மொத்தம் 1934 வாக்குப்பதிவு மையங்களிலிருந்து கொண்டு வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், VVPAT, கட்டுப்பாட்டு கருவி மற்றும் விண்ணப்பபடிவங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 04.06.2024 அன்று வாக்கு என்னும் வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் மத்திய காவல் படை, தமிழ்நாடு காவல் துறை, சிறப்பு காவல் பிரிவு ஆகிய துறைகள் மூலம் 261 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதில் மத்திய காவல் படை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள பகுதியிலும், அதற்கு அடுத்து சிறப்பு பிரிவு காவல் படையினரும், அதற்கு அடுத்து தமிழ்நாடு காவல்துறையினர் என மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள். இவர்களுடன் தீயணைப்புத்துறை அதிநவீன வாகனங்கள் உதவியுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள். மேலும் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகம் முழுவதும் 260 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வரப்பெற்றுள்ளது என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.