முதலியார் பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டம்.
முதலியார் பட்டியில் சிறிய வணிக நிறுவனங்களில் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டு வருவதை கண்டித்து தென் பொதிகை வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடையம் அருகில் உள்ள முதலியார் பட்டியில் உள்ள புரோட்டா கடை ஒன்றில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கடையம், பொட்டல் புதூர், ஆழ்வார் குறிச்சி பகுதிகளில் தொடர்ச்சியாக ஆய்வு என்ற பெயரில் சிறிய வியாபாரிகளுக்கும், பெட்டிக் கடைகளுக்கும் கூட அதிகமான அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்படுவதை கண்டித்து தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கட்டி அப்துல் காதர், செயலாளர் நவாஸ்கான், பொருளாளர் பாக்யராஜ், துணைத் தலைவர் பழக்கடை சுலைமான், திமுக மாவட்ட பிரதிநிதி முகமது யாகூப், திமுக சிறுபான்மை அணி மாவட்ட துணை செயலாளர் ஆதம் சுபைர், அதிமுக கிளை செயலாளர் செல்வராஜ், எஸ்டிபிஐ ஆலங்குளம் தொகுதி செயலாளர் இப்ராஹிம், கிளைச் செயலாளர் மீரான் மைதீன், உள்ளிட்ட வியாபாரிகள் திரண்டு மறியலில் ஈடுபட முயன்றனர். செய்தியறிந்து அப்பகுதிக்கு வந்த காவல் துணையாளர் வேல்முருகன், சிஐடி முருகன் ஆகியோர் வியாபாரிகளை சமாதானம் செய்தனர்.
இதுகுறித்து தென் பொதிகை வியாபாரிகள் சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் கூறியதாவது, கடையம் முதல் ஆழ்வார்குறிச்சி வரை உள்ள பகுதி எந்த வளர்ச்சியும் இல்லாத பகுதியாகும். இங்கே தொழிற் சாலைகளோ, சுற்றுலா தளங்களோ கிடையாது. அதனால் இங்கு சிறு வியாபாரிகள் அன்றாடம் பிழைப்பு நடத்துவது மிகவும் கஷ்டமாக இருக்கும் சூழலில், முதலியார்பட்டி போன்ற சின்ன கிராமத்தில், புரோட்டா கடையில் வந்து 5000, 10000 என அபராதம் விதித்தால் வியாபாரிகள் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்றும், மக்களுக்கு கேடு விளைவிக்க கூடிய பொருளை தடுக்கிறோம் என்று சொல்லக் கூடிய உணவு பாதுகாப்புத்துறை பெரும் ஆபத்து தரக்கூடிய பீடி, சிகரெட், மதுபானம் உள்ளிட்டவைகளை தடை செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், நெகிழிப்பைகளை தயாரிக்கும் கம்பெனிகளை தடை செய்யாமல், விற்பனை செய்யும் வியாபாரிகளை தடுக்காமல், மக்களின் அவசரத் தேவைக்காக வைத்திருக்கும், நெகிழிப்பைகளுக்காக 200 முதல் 500 வரை அபராதம் விதிப்பது வழக்கம். ஆனால் தற்போது 5000 முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் இந்த நிலை தொடர்ந்தால் தென்காசி முதல் அம்பை வரை உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்கள், அரசியல் கட்சிகளை இணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









