தமிழகத்தில் செயல்படக்கூடிய ரசாயன தொழிற்சாலைகளின் பாதுகாப்பினை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும்:- பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி கோரிக்கை!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வந்த எல்ஜி பாலிமர் நிறுவனத்தில் நேற்றைய (07.05.2020) தினம் அதிகாலையிலிருந்தே ஸ்ட்ரெயின் வாயு என்ற நச்சுத்தன்மை வெளியேறி வந்துள்ளது. அந்த வாயுவினை சுவாசித்த அப்பகுதிகளை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு, அதில் பதினோரு பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுவாசப் பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வாயு வெளியேற்றத்தால் பல கிலோமீட்டர் சுற்றியுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த கோர நிகழ்வினை முழு விசாரணைக்கு உட்படுத்தி போதிய நடவடிக்கைகளை ஆந்திர மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.
கொரானா நோய் தொற்றினால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்கள், ரசாயன தொழிற்சாலைகள் செயல்படவில்லை. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிறுவனங்கள், ரசாயன தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது பணியாட்கள் யாரும் இல்லாத நிலையில் அந்த நிறுவனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கழிவு தன்மைகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன என்ற அச்சம் உருவாகி உள்ளது. தமிழக அரசு உடனடியாக இது விஷயத்தில் கவனம் எடுத்து முக்கிய கெமிக்கல் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளின் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த வேண்டும். அளவிடும் கருவிகள், பாதுகாப்பு அம்சங்கள், கழிவுகளின் தன்மைகள் ஆகியவற்றை பரிசோதித்த பிறகே உற்பத்திகளை துவங்குவதற்கும் அந்நிறுவனங்கள் மீண்டும் செயல்படுவதற்கும் அனுமதி வழங்க வேண்டும். இதற்காக பிரத்யேகமாக ஒரு குழுவை உருவாக்கி பாதுகாப்பை கண்காணிக்க வேண்டும்.
மேலும் கூடங்குளம் அனுமின் நிலையத்தில் அவசர நிலை காலத்தில் கூட குறைந்த பணியாளர்களை கொண்டு அங்கு நான்காம் கட்ட கட்டுமானப் பணிகள் நடப்பதாக தகவல்கள் வருகின்றன, இதுபோன்ற சூழலில் அரசு இதை நடைமுறைப்படுத்துவது மிகவும் மோசமான செயலாகும். அவசர கால நேரத்தில் மக்களுடைய பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, ஆபத்தான பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனவும் பேரிடர் விபத்து காலத்தை எதிர் கொள்வதற்கான உரிய பயிற்சிகளை அந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
தமிழகத்திலும் இது போன்ற விபத்துகள் கடந்த காலங்களில் நடந்துள்ளன. கடந்த 2017 செப்டம்பரில் கடலூரில் செயல்பட்ட கெமிக்கல் தொழிற்சாலையில் ரசாயன குழாய் வெடிப்பு ஏற்பட்டு அங்கு உள்ள மக்கள் பலர் தோல் வியாதிகளாலும், மூச்சுத்திணறலாலும் பாதிக்கப்பட்டனர். மேலும், பல்வேறு ரசாயன தொழிற்சாலைகள் பல இடங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்திருக்கிறது.
ஆகவே இதனை கவனத்தில் கொண்டு வரக்கூடிய காலங்களில் சுற்றுச்சூழல் ஆணையத்தின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு ரசாயன தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட விபத்து அனைத்து மாநிலங்களுக்குமான படிப்பினையாக எடுத்துக்கொண்டு தமிழக அரசு விழிப்புணர்வுடன் செயல்பட்டு ரசாயண தாெழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு அம்சங்ளை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நோய் தொற்று உள்ள காலத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தொழிற்சலைகளை பராமரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
இப்படிக்கு
எம்.முஹம்மது சேக் அன்சாரி, மாநில தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









