கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பனைமரத்துபாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் கருப்பசாமி ( வயது 38) முதுகலை பட்டதாரி. இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் அவரது வீட்டில் மொட்டை மாடியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .திருமணம் முடியாத ஏக்கத்தில் இவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் கருப்புசாமி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது . அந்த கடிதத்துடன் உடுமலைக்கு வந்த அவரது உறவினர்கள் நேற்று உடுமலை ஆர். டி. ஓ. ஜஸ்வந்த் கண்ணனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கிராம நிர்வாக அதிகாரி கருப்பசாமியின் இறப்புக்கு மாத இதழ் ஆசிரியர் மணியன் கிராம உதவியாளர் சித்ரா ஆகியோர் தான் காரணம் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
இதற்கு இடையே தற்கொலை செய்த கிராம நிர்வாக அதிகாரி கருப்புசாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- என் சாவுக்கு என் கிராம உதவியாளர் சித்ரா மற்றும் மாத இதழ் ஆசிரியர் மணியன் ஆகிய இருவருமே பொறுப்பு. கடந்த ஒரு வருடம் கடும் இன்னல்களை கொடுத்திருந்தும் அதையும் தாண்டி எனது கிராம மக்களுக்கு பல நன்மைகளை செய்து வந்த நிலையில் வேண்டுமென்றே தமிழகம் முழுவதும் எனக்கு களங்கம் விளைவித்து மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி விட்டனர். மன உளைச்சலுடன் கடந்து 2 மாதங்களாக போராடி பணி செய்து வந்த நிலையில் எந்த ஒரு பொது இடத்திற்கு சென்றாலும் அதே அவப்பெயருடன் சுற்றி வரும் சூழல் ஏற்பட்டது. எனது உயிரினும் மேலான வி.ஏ.ஓ பணியை செய்ய விடாமல் தடுத்த கிராம உதவியாளர் சித்ரா மாத இதழ் ஆசிரியர் மணியன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் அருமை நண்பர்கள் அம்மா, அப்பா, மற்றும் பெரிதும் நேசிக்கும் எனது புதுக்கோட்டை நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் டிஎன்பிஎஸ்சி நண்பர்கள் ஆகியோரை நான் மிகவும் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு செல்கிறேன். நான் மிகவும் வேதனையுடன் தமிழருக்கு மானம் தான் பெரிது என்ற நிலையுடன் உயிர் விடுகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் உருக்கமாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கங்கள் இணைந்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
You must be logged in to post a comment.