நினைவு தூணுக்கு இன்று (10/07 /2018) மரியாதை. இன்றைக்கு சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சி வேலூர் சிப்பாய் புரட்சி 1806ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி நள்ளிரவு இப்புரட்சி நடந்தது. இந்த நாள் இந்திய வரலாற்றில் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்களின் ரத்தத்தினால் எழுதப்பட்ட நாள். வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய சிப்பாய்கள் புரட்சி நடத்தினர். ஆனால் அதற்கு ‘வேலூர் சிப்பாய் கலகம்’ என்றே வரலாற்றில் பதிவு செய்தனர். இந்திய விடுதலை போராட்டத்தின் முதல் வித்து இந்த புரட்சி தான் என்பதை வீரசாவர்க்கர் உட்பட பலர் உணர்த்தியுள்ளனர். இதற்காக அவர்கள் இந்த போராட்டத்தை ‘வேலூர் சிப்பாய் புரட்சி’ என்றே அழைக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
1805ம் ஆண்டு, வேலூர் கோட்டையில் மெட்ராஸ் ரெஜிமெண்டை சேர்ந்த தென்னிந்திய துருப்புகள் பாதுகாப்புப்பணியில் அமர்த்தப்பட்டனர். அந்த ஆண்டில்தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால், இந்தியப்படை வீரர்கள் யாரும் தங்கள் சமய அடையாளங்களை அணிவதோ, தலையில் குடுமி வைத்திருப்பதோ கூடாது என்றும், ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டுமே அணிய வேண்டும் உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இந்த விதிமுறை மூலம் இந்திய சிப்பாய்கள் ஐரோப்பிய முறையில் தொப்பி அணிய வேண்டும் என்பதும், மாட்டுத் தோலால் ஆன பட்டையை அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. இந்து மற்றும் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த 1,500 படை வீரர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட முற்பட்டனர்.
இப்படியாக கிளர்ச்சியில் ஈடுபட முயன்றவர்களுக்கு தலா 600 பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை இந்திய சிப்பாய்களுக்கு மேலும் கோபத்தை உண்டாக்கியது. வேலூர் கோட்டையில் அப்போது சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தான் மகன்கள்தான் இந்த கிளர்ச்சிக்கு காரணம் என குற்றம் சாட்டி கடுமையான சித்ரவதைகள் தொடர்ந்தன. இதுவும் இந்திய சிப்பாய்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆத்திரமடைந்த இந்திய சிப்பாய்கள் 1806ம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி நள்ளிரவு உறக்கத்தில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் பலரை கொன்று குவித்தனர். 350 அதிகாரிகளில் 100 பேர் கொல்லப்பட்டனர், இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய படைகள் கர்னல் கில்லஸ்பி தலைமையில் ஆற்காட்டில் இருந்து விரைந்து வந்து சில மணி நேரத்தில் இந்திய சிப்பாய்கள் 350க்கும் மேற்பட்டோரை கொன்று புரட்சியை அடக்கினர்.
இந்த புரட்சியில் கொல்லப்பட்ட இந்திய வீரர்களை வேலூர் கோட்டைக்குள் இருந்த கிணறு ஒன்றில் வீசி அக்கிணற்றை மூடிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த புரட்சியினால் கொல்லப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளின் உடல்கள் மீட்கப்பட்டு, கோட்டையின் எதிரே அடக்கம் செய்யப்பட்டு கல்லறைகள் எழுப்பப்பட்டன. இன்றைக்கும் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளின் பெயர்கள் தாங்கிய கல்லறைகளை பொதுமக்கள் காண முடியும். இந்த சிப்பாய் புரட்சியில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக வேலூர் மக்கான் பகுதியில் நினைவுத் தூண் ஒன்றும் நிறுவப்பட்டது. 2006ம் ஆண்டில் சிப்பாய் புரட்சியின் இரு நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில், வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது. இத்தகைய சிறப்புமிக்க வேலூர் சிப்பாய் புரட்சியை நினைவுகூறும் வகையில் நாளை சிப்பாய் புரட்சி தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி வேலூர் மக்கானில் அமைக்கப்பட்டுள்ள சிப்பாய்புரட்சி நினைவு தூணுக்கு மரியாதை செய்யப்படுகிறது. புரட்சியின் மூலம் தேசத்தின் விடுதலை வேட்கையை சுதந்திரப்போராட்டத்தை தங்களின் இன்னுயிர் தந்து தொடங்கி வைத்த நமது வீரர்களின் நினைவை போற்றுவோம்.
தொகுப்பு
அ.சா.அலாவுதீன்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










