வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் நிர்வாகத்தை இன்று முதல் (22/06) ஏற்றுகொண்டதாக அறிவித்துள்ள தமிழக அரசு, அதே கோட்டையில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற முஸ்லிம்களின் நீண்ட கால கோரிக்கையை கிடப்பில் போட்டுள்ளது.
வேலூரில் அமைந்துள்ள பிரம்மாண்டமான கோட்டைக்குள் அமைந்துள்ள பள்ளிவாசல் 1750ல் நிர்மாணிக்கப்பட்டதாகும். பளிங்கு கற்களால் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசல் தற்போது இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகின்றது.
தற்போது இந்தப் பள்ளிவாசலில் தொழுகைக்கு அனுமதிப்பதில்லை. பள்ளிவாசல் நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. வேலூர் கோட்டை பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக முஸ்லிம்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
1921ல் இந்திய தொல்பொருள் துறை, வேலூர் கோட்டையில் அமைந்துள்ள பள்ளிவாசல் மட்டுமின்றி, ஜலகண்டேஸ்வரர் கோயில், கிறிஸ்தவ தேவாலயம் உள்ளிட்ட 138 ஏக்கர் நிலத்தையும் தனது பாதுகாப்பின் கீழ் எடுத்துக் கொண்டது. பழங்கால நினைவிடங்கள் பராமரிப்பு சட்டம் 1904, 1952, மற்றும் 1958 சட்டத்தின்படி வேலுர் கோட்டை முழுவதையும் தொல்பொருள் துறை தனது பராமரிப்பின் கீழ் கொண்டு வந்தது.
வேலூர் கோட்டை பள்ளிவாசலை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த நேரத்தில் அங்கு வழிபாடு நடைபெறவில்லை, எனவே இப்போது அங்கு வழிபாடு நடத்த அனுமதிக்க இயலாது என்று தொல்பொருள் துறை கூறுகிறது. தொல்பொருள் துறை பொறுப்பில் எடுக்கும் போது ஜலகண்டேஸ்வர் கோயிலிலும் வழிபாடு நடைபெறவில்லை.
வேலூர் மக்கள், ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை தொல்பொருள் துறை ஏற்காததால், 1981 மார்ச் 16ல். ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் பொதுமக்கள் தாங்களாகவே வழிப்பாட்டை தொடங்கி விட்டனர்.
தொல்பொருள் துறை நிர்வாகமும் அதை தடுக்கவில்லை. காவல்துறையிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் மட்டும் செய்தனர். மாவட்ட நிர்வாகம், இது ஒரு நுட்பமான மத விவகாரம் என்றும், இதில் தடுப்பு நடவடிக்கை எடுத்தால் அது சட்டம் ஒழுங்கை பாதித்து விடும் என்றும், கூறி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிறுபான்மை முஸ்லிம் சமூகமோ, பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி வேண்டி, எவ்வித வரம்பு மீறலிலும் ஈடுபடாமல், மத்திய மாநில அரசுகளிடம் அடுக்கடுக்கான கோரிக்கைகளை முன் வைத்தும் இன்றுவரை பலன் இல்லை.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











