லட்சக்கணக்கானோர் திரண்ட எஸ்டிபிஐ கட்சியின் வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாடு..!
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பு.
மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில், ‘வெல்லட்டும் மதச்சார்பின்மை’ என்ற முழக்கத்துடன், மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு இன்று (ஜனவரி 07) நடைபெற்றது. மதுரை வண்டியூர் டோல்கேட் அருகில் உள்ள அம்மா திடலில் உள்ள மகாத்மா காந்தி மைதானத்தில், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில், கொடியேற்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு துவங்கியது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வரவேற்புரையாற்றினார். மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் மாநாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.ரபீக் அகமது துவக்கவுரையாற்றினார். மேலும், கட்சியின் மாநில பொதுச் செயலாளர்கள் அகமது நவவி, அச.உமர் பாரூக், துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில செயலாளர்கள் ரத்தினம், நஜ்மா பேகம் ஆகியோர் மாநாட்டின் நோக்கம் குறித்து உரையாற்றினர். கட்சியின் மாநில செயலாளர்கள் ஏ.கே.கரீம், ராஜா உசேன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த மாநாட்டில், மாண்புமிகு தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வரும், அஇஅதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையுரையாற்றினார். மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட தவத்திரு திருவடிக்குடில் அடிகளார், ஆசிய கத்தோலிக்க மன்றத் தலைவரும், தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட முன்னாள் பேராயருமான பேராயர் யுவான் அம்புரோஸ், இஸ்லாமிய ஆராய்ச்சி மைய நிறுவனர் மவ்லவி ஷாஹூல் ஹமிது ஜமாலி, ஈரோடு நூருல் இஸ்லாம் மஸ்ஜித் தலைமை இமாம் மவ்லவி முஹம்மது தையிப் தாவூதி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயலாளர் அப்துல் சத்தார், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கேரள மாநில தலைவர் மூவாற்றுப்புழா அஷ்ரப் பாகவி, கர்நாடகா மாநில தலைவர் அப்துல் மஜீத், எஸ்.டி.பி.ஐ. தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, முகமது பாரூக் ஆகியோரும் சிறப்புரை நிகழ்த்தினர்.
மேலும், இந்த மாநாட்டில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர், செல்லூர்ராஜு, காமராஜ், ராஜன் செல்லப்பா, ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, அப்துல் ரஹீம் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக மாநாட்டின் மதுரை பிரகடனத்தை மாநில பொருளாளர் அமீர் ஹம்சா வாசித்தார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் நஸ்ரூதீன் நன்றியுரையாற்றினார்.
*லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.*
1. முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை – சட்டரீதியான விடுதலை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
2. நீட் தேர்வுக்கு விலக்கு – தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு விரைவில் நிறைவேற்றிட வேண்டும்.
3. சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் அவல நிலையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை விரைவில் செயல்படுத்த வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கான பீக்ஹவர் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
5. சிறுபான்மை முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்.
6. சச்சார் கமிட்டி போன்று தமிழக முஸ்லிம்களின் வாழ்நிலைகள் குறித்து அறிய கமிட்டி அமைக்க வேண்டும்.
7. பள்ளிவாசல், தேவாலயம் கட்டும் அனுமதியை எளிமையாக்க வேண்டும்.
8. பல்கலைக்கழக துணை வேந்தர், டி.என்.பி.எஸ்.சி. பொறுப்புகளுக்கு சிறுபான்மை சமூகத்தவர்களையும் நியமிக்க வேண்டும்.
9. ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தை தொய்வின்றி தொடர வேண்டும்:
10. நில ஒருங்கிணைப்பு சிறப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
11. அரசியல் பழிவாங்கும் ஏவல் கருவியாக மாற்றப்படும் விசாரணை அமைப்புகள்! – கண்டிக்கத்தக்கது
12. சிறுபான்மை வெறுப்பு நடவடிக்கைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கிட வேண்டும்.
13. கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்தும் பாஜக அரசின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்:
14. படித்த இளைஞர்களை ஏமாற்றாமல் அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை வெளிப்படைத் தன்மையுடன் விரைவாக நிரப்ப வேண்டும்.
15. அனைத்துத் துறைகளிலும் சமூக நீதியை நிலைநாட்ட சமவாய்ப்பு ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும்.
16. ஆக்கிரமிப்பு வக்பு சொத்துக்களை மீட்டு, அதன்மூலம் சிறுபான்மை சமூகம் பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
17. மாநில சிறுபான்மை சமூக அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பதவி உயர்வு வழங்கப்பட (Conferred) வேண்டும்.
18. தமிழகத்தில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு தனியாக அமைச்சகம் அமைக்க வேண்டும்.
19. விவசாய நிலங்களை பாழ்படுத்தும் திட்டங்கள், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் அழிவுத் திட்டங்கள் ஆகியனவற்றிலிருந்து தமிழகத்தை பாதுகாக்க வேண்டும்.
20. விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநிதித்துவம் கொண்டுவர வேண்டும்.
21. தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
22. பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமையை உறுதி செய்வதோடு, 33% இடஒதுக்கீட்டை விரைவில் விரைவில் செயல்படுத்த வேண்டும்.
23. தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும்.
24. நலிவடைந்துவரும் சிறு, குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்த வேண்டும்.
25. சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவது அரசியலமைப்பிற்கு எதிரானது.
26. தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு எதிராக அதிகரித்துவரும் சாதிய தாக்குதல்களை தடுத்திட வேண்டும்.
27. இந்திய குற்றவியல் நீதி அமைப்பை மாற்றும் புதிய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
28. அரசு வேலைவாய்ப்பில் தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்வி நிறுவனத்தின் கல்விச் சான்றிதழை அங்கீகார குறைப்பு செய்த அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்:
29. மதச்சார்பற்ற இந்திய நாட்டை அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும்.
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









