2026-ல் 25 தொகுதிகளை கேட்டுப் பெறவேண்​டும், இது நமது கட்சிக்கான சரியான நேரம் என எண்ணுகிறோம்! விசிக வன்னி அரசு பரபரப்பு கருத்து! இது அவரது தனிப்பட்ட கருத்து! தொல். திருமாவளவன் பதில்..

2026-ல் திமுக கூட்​ட​ணி​யிலேயே தொடர்​வோம் என திரு​மாவளவன் கூறி​யுள்​ளார். என்னைப் ​போன்ற கடைநிலை தொண்டர்​களின் மனநிலை என்னவென்​றால், 2026-ல் 25 தொகுதிகளை கேட்டுப் பெறவேண்​டும், இது நமது கட்சிக்கான சரியான நேரம் என எண்ணுகிறோம்” எம்று விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கருத்துத் தெரிவித்திருப்பது மீண்டும் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைப் பற்றவைத்துள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து ஆறு மாதகாலம்தான் ஆகியிருக்கிறது, ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே தொற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. ஆளும் கட்சியான திமுகவும் எதிர்க்கட்சியான அதிமுகவும் ‘200 இடங்கள் இலக்கு’ என இப்போதே பேச ஆரம்பித்துவிட்டன. பாஜக தலைவர் அண்ணாமலை, “2026-ல் தமிழ்நாட்டில் ஐந்துமுனைப் போட்டி இருக்கும். கூட்டணி ஆட்சிதான் அமையும்” எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என மற்ற கட்சிகளிலும் 2026 தேர்தல் களத்துக்காகத் தயாராகி வருகின்றன.

இந்தநிலையில், விசிகவின் துணைப் பொதுச் செயலாளர்களுள் ஒருவரான வன்னி அரசு,. “விசிக-வுக்கான வலிமை என்பது, குறைந்தபட்சம் இரட்டை இலக்கத்தில் சட்டப் பேரவையில் இருக்க வேண்டும். அதற்குக் குறைந்தபட்சம் 25 இடங்களாவது கேட்டுப் பெற வேண்டும் என்பதுதான் அடிநிலைத் தொண்டர்களின் மனநிலை. சனாதனத்துக்கு எதிராக இந்தியாவில் அம்பேத்கரின் கொள்கைகளை, பெரியாரின் கொள்கைகளைப் பாதுகாத்து வலிமையாக இயங்கிக் கொண்டிருக்கின்ற பேரியக்கத்துக்கு 25 இடங்கள் கொடுக்க வேண்டும் என்பதே என்னைப் போன்ற அடிநிலைத் தொண்டர்களின் விருப்பம். இறுதியில் எவ்வளவு என்று தலைவர் முடிவெடுப்பார். இருப்பினும் எங்களின் விருப்பத்தைக் கட்டாயம் நாங்கள் சொல்வோம்” என தனியார் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கருத்துத் தெரிவித்துள்ளார். அவரின் இந்தக் கருத்துக்கு திமுக தரப்பின் எதிர்வினை என்ன? விசிக தலைவர் திருமாவின் பதில் என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக, விசிகவின் தேர்தல் பயணம் குறித்துப் பார்ப்போம்.

திருமாவளவன் ஒருங்கிணைப்பாளராக இருந்த இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் அமைப்பு 1991-ம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகளாக மாற்றம் பெறுகிறது. முதல் எட்டு ஆண்டுகள் தேர்தல் அரசியல் களத்தில் இருந்து விலகியிருந்த நிலையில், 1999 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து முதன்முதலாக தேர்தலில் களமிறங்கியது விசிக. சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். தொடர்ந்து, 2004 தேர்தலில், ஐக்கிய தனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அதே சிதம்பரம் தொகுதியில் 2.5 லட்சம் வாக்குகள் பெற்று அசத்தினார்.

தொடந்து, 2001 சட்டமன்றத் தேர்தலில், திமுகவுடன் கூட்டணி அமைத்தது விசிக. மங்களூர் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்று சட்டமன்றம் சென்றார். ஆனால், தி.மு.க கூட்டணியில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, 2004-ல் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கடுத்து போட்டியிட்ட தேர்தல்களிலெல்லாம், தனிச் சின்னத்தில் போட்டியிட்டபோதும் அவர் கட்சியால் கணிசமான வெற்றியைப் பெற முடியவில்லை. 2006 தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒன்பது தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. 2011 தேர்தலில் தி.மு.க கூட்டணியில், பத்து தொகுதியில் போட்டியிட்டு ஓர் இடத்தில்கூட வி.சி.க-வால் வெற்றிபெற முடியவில்லை. தொடர்ந்து, 2016 தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்டும் வெற்றிபெற முடியவில்லை. காட்டுமன்னார் கோவிலில் போட்டியிட்ட கட்சியின் தலைவர் திருமாவளவன் வெறும் 87 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார்.

இந்தநிலையில், 2021 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் செய்யூர், வானூர், திருப்போரூர், அரக்கோணம், காட்டுமன்னார்கோவில், நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், அரக்கோணம், வானூர் தவிர மற்ற நான்கு இடங்களிலும் விசிக வெற்றி பெற்றது. 2024 தேர்தலில், சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிபெற்றதோடு கட்சி அங்கீகாரமும் பெற்றது. இந்தநிலையில், 2026 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம் என துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடலூரில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம், வன்னி அரசு கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த அவர், 25 தொகுதிகள் வேண்டும் என்பது வன்னி அரசின் தனிப்பட்ட கருத்து. தவிர அது விசிக நிர்வாகிகளின் விருப்பமும் கூட. அவர்களின் விருப்பம் இயல்பானதே. விசிக என்றைக்குமே இத்தகைய நிபந்தனைகளை முன்கூட்டியே வைத்ததில்லை எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

வன்னி அரசின் கருத்து குறித்து, திமுக மூத்த தலைவரும், தமிழக வேளாண் அமைச்சருமான எம்.ஆர்.கேபன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னமும் 15 மாதங்கள் உள்ளன. இப்போதே தொகுதிப் பங்கீடுகள் குறித்து பேசத் தேவையில்லை. கூட்டணி குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் அப்போது பேசிக்கொள்ளலாம். மேலும், அதிமுக போல் திமுக கூட்டணிக் கட்சிகளை வெளியேற்றும் இயக்கம் இல்லை. கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மதிப்பளிக்கும் கட்சி திமுக. முதல்வர் கூட்டணிக் கட்சிகளை மதிப்பவர். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கூட்டணியில் இருந்த கட்சிகள் இப்போதும் கூட்டணியில் இருக்கின்றன. முதல்வர் தொடர்ச்சியாக கூட்டணியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு கூட்டணிக் கட்சிகளை முதல்வர் மதிக்கும் பண்பே காரணம்” எனக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!