எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல், இன்று சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட, முதல் பிரதியை அம்பேத்கர் பேரன் ஆனந்த டெல்டும்டே பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் விஜயும், ஆதவ் அர்ஜுனாவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா கலந்துகொள்ளாதது குறித்துப் பேசினர்.
குறிப்பாக, தவெக தலைவர் விஜய், “அம்பேத்கர் அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு, கூட்டணி கட்சிகள் சார்ந்து விசிக தலைவர் திருமாவளவனுக்கு எவ்வளவு Pressure இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும்… நான் இப்போ சொல்றேன்… அவர் மனசு முழுக்க முழுக்க இன்னைக்கு நம்மளோடதான் இருக்கும்!” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு அவர் பதிலளித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் பேசிய அவர், “விஜய், அம்பேத்கரின் நூலை வெளியிட்டிருப்பதும் அவரைப் பற்றிப் பேசியிருப்பதும் பெருமையளிக்கிறது. அந்த புத்தக நிகழ்வில் நான் பங்கேற்காமல் போனதற்குக் காரணம் திமுக கொடுத்த அழுத்தம் என விஜய் பதிவு செய்திருக்கிறார். அதற்கு இணங்கக்கூடிய அளவுக்கு நானோ அல்லது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோ பலவீனமாக இல்லை என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த நிகழ்வில் நான் பங்கேற்காமல் போனதற்கு, விஜய் காரணமில்லை. எங்களுக்கும் எந்தவிதமான சிக்கலும் இல்லை. விஜயின் விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்” என்றார்.
தொடர்ந்து அவர், “விஜய் – திருமா இரண்டு பேரையும் வைத்து அரசியல் சாயம் பூசியவர்களே பிரச்னைக்குக் காரணம். யார் எந்தப் பின்னணியில் இயங்குகிறார்கள் என்று எனக்குத் தெரியும். திமுக எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அந்தக் கட்சி எனக்கு அழுத்தம் தரவில்லை. அழுத்தம் கொடுத்து இணங்கக்கூடிய அளவுக்கு பலவீனமானவன் நான் இல்லை. அழுத்தத்திற்கு பயந்து பங்கேற்காமல் இருக்க வேண்டிய தேவை எனக்கில்லை. நூல் வெளியீட்டு விழாவுக்குச் செல்லாதது என்னுடைய முடிவு. நாங்கள் ஏற்கெனவே ஒரு கூட்டணியில் இருக்கிறோம்.
அந்த கூட்டணியை உருவாக்கியதில் விசிகவுக்கு பங்கு உண்டு. அந்தக்கூட்டணியில் தொடர்கிறோம். தொடர்வோம். திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக அங்கம் வகிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆதவ் இருந்தாலும், துணை பொதுச்செயலாளராக இருந்தாலும், அவர் அங்கு வாய்ஸ் ஆஃப் காமன் என்கிற நிறுவனத்தின் சார்பில் ஆதவ் கலந்து கொண்டிருக்கிறார். அவர் சொல்லியிருக்கிற கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு, கட்சிக்கு பொறுப்பல்ல. ஒவ்வொரு தனி மனிதருக்கும் பேச சுதந்திரம் உண்டு. இந்த நிலையில், திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் கருத்து தெரிவித்து வருகிறார் என்பது உண்மை. அவரிடம் விளக்கம் கேட்போம். உரிய விளக்கம் கிடைக்கும் என்று பார்ப்போம். அதன்பிறகு இயக்க முன்னணி தோழர்களோடு கலந்து பேசுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.