எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல், இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் வெளியிடப்பட்டது. த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட, முதல் பிரதியை அம்பேத்கர் பேரன் ஆனந்த டெல்டும்டே பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொண்டார்.
முன்னதாக இந்த விழாவில் நூல் உருவாக்கம் குறித்துப் பேசிய விசிக துணைப் பொதுச் செயலாளரும், வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனருமான ஆதவ் அர்ஜூனா, “தமிழகத்தின் முதல் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதி ஐபிஎஸ் எனக்கு பெரியம்மா போன்றவர். எனது தாய்க்கு மிகவும் நெருக்கமானவர். எனது தாய் காதலித்தபோது ஜாதி கௌரவத்திற்காக விவசாயி ஒருவரை கட்டாய திருமணம் செய்து வைத்தனர். ஆனால் எனது தாய் தற்கொலை செய்துகொண்டார். திருமணத்துக்குப்பின் ஏற்பட்ட வறட்சி, அதனால் வீட்டில் ஏற்பட்ட வன்முறைதான், என் தாய் தற்கொலை செய்ய காரணமானது.
அன்று என் பெரியம்மாதான், எங்களை வளர்த்தார். இப்படி சாதி கொடுமைக்கு நேரிடையான சாட்சியாக நானே நிற்கிறேன். என் தாயின் இறப்பு, தனிமை என்னை நூலகங்களை நோக்கி இழுத்துச் சென்றது. சின்ன வயதில், மாவேயிஸ்ட் ஆக வேண்டும், நக்சலைட் ஆகணும் என்று நினைத்தேன். அப்போது, என் பேராசிரியர்கள் எனக்கு அறிவுரை வழங்கினார். ‘இந்த சிஸ்டத்தை மாற்ற வேண்டுமென்றால், இந்த சிஸ்டத்தை நீ பழக வேண்டும்’ என்று கூறினார்.
அன்றிலிருந்து, இரு ஆராய்ச்சியை மேற்கொண்டேன். ஒன்று பெரியாரின் கொள்கை, மற்றொன்று புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கை.
விசிக தலைவர் திருமாவளவன் இங்கு இல்லை; ஆனால் அவரின் மனசாட்சி இங்குதான் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். தமிழகத்தில் புதிய கருத்தியல் தலைவராக விஜய் உருவெடுத்து இருக்கிறார். புதிய வரலாற்றை உருவாக்கும் மேடையாக இந்த மேடை உருவாகி இருக்கிறது. மன்னர் பரம்பரையை ஒழிக்க, அம்பேத்கரின் சிந்தனை தேவைப்படுகிறது. திருமா அண்ணனின் கனவு என்ன? தலித் மட்டும் பேசிக் கொண்டிருந்த அம்பேத்கரை, தலித் அல்லாத விஜய் வெளியிடுவது என்பதுதான். புரட்சியாளர் அம்பேத்கரின் கனவு. திருமாவின் கனவு. இன்று அந்த கனவு ஈடேறியிருக்கிறது. விஜய்க்கு அரசியல் தெரியுமா, கொள்கை தெரியுமா என்று விஜய் மீது விமர்சனம் செய்கிறார்கள். கொள்கை பேசியர்வகள் ஏன் அம்பேத்கரை மேடை ஏற்றவில்லை? முதல் முறையாக அம்பேத்கரின் நினைவு நாளில், எல்லா அமைச்சர்களும் அம்பேத்கரை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் எங்களுக்கு கிடைத்த வெற்றி.
தமிழகத்தில் ஊழலை நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். மன்னராட்சியைக் கேள்வி கேட்டால் சங்கி என்று சொல்வார்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால், தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்துவிட்டார்கள். 2026-இல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும். பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராகக் கூடாது. தமிழகத்தை, கருத்தியல் தலைவர்கள்தான் ஆள வேண்டும். ஆட்சியில் பங்கு கேட்டால் தர முடியாது என்கிறார்கள். ஏன் நாங்கள் கேட்கக் கூடாது? எல்லோரும் சமம் என்று சொல்வதுதான் திராவிடம். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதை ஏன் பேசக்கூடாது?
தமிழகத்தில் சாதிய செல்வாக்கு அடிப்படையில் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆதிக்கத்துக்கு எதிராகப் பேசினால் எதிரிகள் உருவாவது இயல்புதான். இனிமேல் நெஞ்சுக்கு நேராக பேசுவோம். முதுகுக்கு பின்னால் பேச வேண்டாம். தலித் பிரச்னைகளை தலித் மட்டும் பேசக்கூடாது. தலித் மக்கள் 1 கோடியே 40 லட்சம் பேர் உள்ளனர். ஆதிதிராவிடர்கள் மட்டும் 92 லட்சம் பேர் உள்ளனர். ஆனால், ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்றால், ‘சனாதனம் சனாதனம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். விஜய் மட்டும்தான், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று முதலில் குரல் கொடுத்தவர். இங்கு சாதியின் அடிப்படையில் உருவாக்கக் கூடிய தேர்தல் அரசியல்தான் பிரச்னை. இது மாற்றப்பட வேண்டும்.
குடும்ப ஆட்சி, ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளைக் கூறி 2014-ல் பாஜக வென்றார்கள். இன்றைக்கு வரைக்கும் பாஜகவை யாராலும் வெல்ல முடியவில்லை. ரூ.2000 கோடி வருவாயை விட்டுவிட்டு வருகிறார் விஜய். ஆனால், தமிழ்நாட்டில் திரைத்துறையில் அரசியல் நிலவுகிறது. ஒரே நிறுவனம் எப்படி எல்லா படத்தையும் வெளியிடுகிறது? புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் கிராமத்தில், குடிநீரில் மனித மலத்தைக் கலந்தார்கள். ஆனால் இதுவரை அந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்திற்கு விஜய் செல்ல வேண்டும். என்னுடைய ஒரே வேண்டுகோள், தீண்டாமை ஒழிப்பு முக்கியமல்ல, ஜாதியை அழிக்க வேண்டும். விஜய் அவர்கள் வேங்கைவயல் கிராமம் சென்று, மக்களுடன் உரையாட வேண்டும். நீங்கள் களத்திற்கு வரவேண்டும். ஒரு புத்தக வெளியீடு எப்படி எல்லா அமைச்சர்களையும் அம்பேத்கருக்கு மாலை போட்டு புரட்சியாளர் என்று கூறினார்களோ, அதுதான் உங்கள் வெற்றி” என உரையாற்றினார்.
இது தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
You must be logged in to post a comment.