கட்சியில் இருந்து, விடுதலை சிறுத்தைக் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனாவின், ‘வாய்ஸ் ஆப் காமன்’ அமைப்பு சார்பில், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தலைப்பிலான நுால் வெளியீட்டு விழா, சென்னையில் கடந்த 6ம் தேதி நடந்தது. இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ‘தமிழகத்தில் உள்ள மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்’ என்றார்.
தி.மு.க.,வை நேரடியாக தாக்கி பேசியது, அக்கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. அதேநேரத்தில், விழாவில் தி.மு.க.,வுக்கு எதிராக பேசிய ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது. உயர் நிலைக்குழு கூடி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று (டிச.,09) கட்சியில் இருந்து, விடுதலை சிறுத்தைக் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.
இது குறித்து கடந்த டிச.,7ம் தேதி, கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு ‘தவறான முன்மாதிரியாக’ அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி,கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜூனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









