ஒன்றிய அரசின் மும்மொழி கல்வி திட்டம்; வைகோ கடும் கண்டனம்…

மும்மொழி திட்டத்தை ஏற்றால் தான் ஒன்றிய அரசு நிதி கிடைக்குமா? என கேள்வி எழுப்பிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஒன்றிய அரசு மும்மொழி திட்டம் எனும் பெயரில் மாநில கல்வி உரிமையை நசுக்க நினைப்பதை ஏற்க முடியாது எனக்கூறி ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் (எஸ்எஸ்ஏ) மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் 2023-24 கல்வியாண்டின் 4-ஆம் தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25 கல்வியாண்டின் நிதி ரூ.2,152 கோடியும் ஆக மொத்தம் 2401 கோடி ரூபாய் ஒன்றிய அரசால் இன்னும் விடுவிக்கப்படாதால் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் (எஸ்எஸ்ஏ) வழங்கப்படும் நிதியுதவி பயன்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆண்டு தோறும் ஒன்றிய அரசு 60 விழுக்காடு, மாநில அரசு 40 விழுக்காடு என்ற பகிர்வு முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் பலனைப் பெற வேண்டும் என்றால் ஒன்றிய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு தேர்வு செய்யப்படும் பள்ளிகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குச் செல்லும். ஆனால் இந்தத் திட்டத்தில் இணைய தமிழ்நாடு, கேரளா, டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம் விருப்பம் தெரிவிக்கவில்லை.

 

இதையடுத்து சமக்ரா சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை ஒன்றிய கல்வி அமைச்சகம் நிறுத்தியுள்ளது. இந்த நிலையில், ஒன்றிய அரசின் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களிடம் வாரணாசியில் நேற்று செய்தியாளர்கள் தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ நிதி ஒதுக்காதது தொடர்பாக கேட்ட போது, “தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. அதனால் விதிமுறைகளின் படி எங்களால் நிதி ஒதுக்க முடியாது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் போது தமிழகம் மட்டும் அதற்கு மறுப்பு தெரிவிப்பது சரியானதல்ல. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை விதிகளின் படி தமிழகத்துக்கு நிதி ஒதுக்க முடியாது” என்று ஆணவமாக தெரிவித்திருப்பது கண்டனத்துக்கு உரியது.

 

தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழித் திட்டத்தை ஒன்றிய அரசு திணிப்பதால் தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது. பேரறிஞர் அண்ணா அவர்களால் கொண்டு வரப்பட்ட இரு மொழித் திட்டம் தான் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய பாஜக அரசு இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பதற்கு தேசியக் கல்விக் கொள்கையை ஒரு கருவியாக பயன்படுத்தி, மாநில அரசுகளின் கல்வி உரிமையை நசுக்க நினைப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. ஒன்றிய கல்வித் துறை அமைச்சகம் உடனடியாக தமிழ்நாட்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!