உசிலம்பட்டி அருகே விவசாயம் செழிக்க சாத்தான் பொங்கல் எனப்படும் விநோதத் திருவிழா

உசிலம்பட்டி அருகே விவசாயம் செழிக்க சாத்தான் பொங்கல் எனப்படும் விநோதத் திருவிழா நடைபெற்றது.முற்காலத்தில் ஆண்டுக்கு முப்போக விவசாயம் நடைபெறும்.இதில் மூன்றாவது போகம் ஆடி மாதத்தில் விதை விதைத்து ஐப்பசியில் அறுவடை செய்வர்.இந்த இடைப்பட்ட காலங்களில் பயிர் நன்றாக வளர்ந்துள்ள நிலையில் பாம்பு பல்லி போன்ற விலங்குகள் தோட்டத்தில் வயல்வெளிகளில் இல்லாமல் இருப்பதற்காகவும் தீய சக்திகள் பொதுமக்களை பயமுறுத்தாமல் இருப்பதற்காகவும் சாத்தான் பொங்கல் எனப்படும் விநோதத் திருவிழா ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கிராமத்தில் கொண்டாடப் பட்டு வருகிறது.

இதன்படி கோவில் பூசாரி 48 நாள் விரதமிருந்து திருவிழாவின் முதல் நாளன்று ஒரு அடியில் மண்ணாலான நாகர் (பாம்பு)சிலை நாய்சிலை ஆகிய சிலைகள் செய்து ஊர் மந்தையிலுள்ள விநாயகர் சிலை அருகே வைக்கின்றார்.; திருவிழா நாளன்று இச்சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கிராமமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.பின்னர் இச்சிலைகள் ஊர்வலமாக குப்பணம்பட்டி கிராமம் முழுவதும் வலம் வருகின்றன.பின் ஊர் எல்லையில் இச்சிலைகளை உடைத்து விட்டுத் திரும்புகின்றனர். இவ்வாறு வழிபடுவதால் கிராமத்தில் தீயசக்தி அண்டாமல் இருப்பதாகவும் தோட்டத்தில் பாம்பு பல்லி பூரான் போன்ற கொடிய விலங்கினங்கள் வராமல் கிராம மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக நம்புவதாகவும் இதனால் இத்திருவிழாவை முன்னோர் காலத்திலிருந்து நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!