உசிலம்பட்டியில் பிறந்து ஏழு நாட்களே ஆன பெண்குழந்தை உயிரிழப்பு, போலிசார் விசாரணை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி – சிவப்பிரியங்கா தம்பதி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 8 மற்றும் 3 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 10 ஆம் தேதி பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி அருகே உள்ள தங்களது வீட்டிற்கு வந்த இந்த தம்பதி, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறி நேற்று நள்ளிரவு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

அரசு மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் பெண் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்., மேலும் குழந்தையின் முகத்தில் காயங்கள் இருந்ததை கண்ட மருத்துவர் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்து மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்த காவலர்களிடம் தகவல் அளித்துள்ளனர். தவகலறிந்து விரைந்து வந்த போலிசார் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்துவிட்டு சம்மந்தப்பட்ட உத்தப்பநாயக்கணூர் காவல் நிலையத்திற்கு புகார் மனு அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் உத்தப்பநாயக்கணூர் போலிசார் பெண் குழந்தையின் பெற்றோரான சின்னச்சாமி – சிவப்பிரியங்கா தம்பதியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே இரு பெண் குழந்தை உள்ள சூழலில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தை முகத்தில் காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!