திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் புதிய காஞ்சீபுரம் சாலையில் சவுந்திரி திரையரங்கம் பஸ் நிறுத்தத்தின் அருகே உள்ள டீக்கடையில் டீ குடிக்க வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு காரில் வந்த 10-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் காரில் இருந்து அரிவாளுடன் கீழே இறங்கி டீக்கடையில் நின்று கொண்டிருந்த வாலிபரை வெட்டினர். இதனால் சுதாரித்துக்கொண்ட அந்த வாலிபர் அவர்களிடம் இருந்து உயிர்தப்ப அங்கிருந்து ஓடினார். அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து செய்யாறுக்கு ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நிற்பதற்காக மெதுவாக வந்தது. அந்த தனியார் பஸ்சில் வாலிபர் தாவி ஏறினார்.
அவரை பின்தொடர்ந்து விரட்டிவந்த மர்ம கும்பலும் அரிவாள்களுடன் பஸ்சின் முன்வாசல் வழியாகவும், பின்வாசல் வழியாகவும் ஏறியது. அப்போது மர்ம நபர்கள், டிரைவரை அரிவாளை காட்டி மிரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பயணிகளுடன் பஸ்சை அப்படியே நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். உடனே, டிரைவர் சீட்டிற்கு பின்சீட்டில் இருந்த அந்த வாலிபரை மர்ம நபர்கள் தலை, முகம் மற்றும் உடல் முழுவதும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் அந்த வாலிபர் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார். இதனை சற்றும் எதிர்பாராத பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து மர்ம நபர்கள் அரிவாள்களுடன் சாவகாசமாக தாங்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செய்யாறு சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பி.சுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பஸ்சில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் பஸ்சை பறிமுதல் செய்து, செய்யாறு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


You must be logged in to post a comment.