கரூர் பலி தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் மேற்கொள்ளப்பட்ட சிபிஐ விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
2 ஆம் கட்டமாக இன்று(ஜன. 19) நடைபெற்ற விசாரணையில் சுமார் ஐந்தரை மணி நேரம் விஜய்யிடம் விசாரணை நடைபெற்றதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த செப். 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் பலியான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ விசாரித்து வருகிறது.
கரூரில் முகாமிட்டு சிபிஐ அதிகாரிகள் முதல்கட்ட விசாரணையை மேற்கொண்ட நிலையில், தற்போது தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வழக்கில் தொடர்புடைய அனைவரையும் நேரில் வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய்யிடம் கடந்த ஜன. 12 ஆம் தேதி 6 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று(ஜன. 19) மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.
கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது, வாகனத்தில் நின்று பேசும்போது கூட்ட நெரிசலை பார்க்கவில்லையா? 7 மணிநேரம் தாமதம் ஏன்? கூட்ட நெரிசலின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? நெரிசலில் வாகனத்தை முன்னோக்கிச் செலுத்தியது ஏன்? என அதிகாரிகள், விஜய்யிடம் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் சில கேள்விகளுக்கு விஜய் பதிலளித்த நிலையில், சில கேள்விகளுக்கு அவகாசம் கோரியுள்ளதாகவும் சிலவற்றுக்கு ஆதாரங்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்று சுமார் ஐந்தரை மணி நேரம் விஜய்யிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் மாலை விசாரணை நிறைவு பெற்றுள்ளது. விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த விஜய், பின்னர் காரில் இருந்து இறங்கி அங்கிருந்தவர்களைப் பார்த்து கையசைத்தார்.
இதன்பின்னர் விஜய்க்கு எந்த சம்மனும் இல்லை என்று தவெக நிர்வாகி நிர்மல்குமார் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்படவுள்ளது, விஜய் கைது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிஐ அதிகாரிகள் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









