தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அண்மையில் தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக். 27ம் தேதி பிரமாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை(ஜன. 10) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள மாவட்ட செயலாளர்கள் பனையூர் அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை வாக்கெடுப்பு முறையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், அணித் தலைவர்கள் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கூட்டத்தில் கட்சி நலன் சார்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
You must be logged in to post a comment.