தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக உள்ள விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.இதைத் தொடர்ந்து கடந்த 27-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் பிரமாண்டமான முறையில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டை நடத்திக் காட்டினார்.இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றது தமிழக அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.பாரதிய ஜனதா, தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தனது எதிரி என மாநாட்டு மேடையில் அறிவித்த விஜய் 2026-ம் ஆண்டு தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் தங்களோடு கூட்டணி அமைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என்றும் பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.இது தொடர்பாக காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் விஜய்யின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்திருப்பதும் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது போன்ற ஒரு சூழலில் விஜய் இன்று தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுடன் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முக்கிய ஆலோசனை நடத்தினார்.கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலை 10.35 மணியளவில் விஜய் கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்தார். அப்போது அலுவலகத்தில் வெளியில் திரண்டிருந்த கட்சி தொண்டர்களை பார்த்து அவர் கை அசைத்தார்.பின்னர் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்றார். த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.த.வெ.க. மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பின்னர் நடைபெற்ற முதல் கூட்டம் இதுவாகும். கட்சியில் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.தமிழகம் முழுவதும் வருகிற 27-ந்தேதி முதல் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான ஏற்பாடுகளை செய்வது பற்றியும், தமிழக வெற்றி கழகத்துக்கு மாநில, மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமிப்பது பற்றியும் ஆலோசனை எனவும் இப்படி பல்வேறு விஷயங்கள் பற்றி த.வெ.க. தலைவர் விஜய் இன்று ஆலோசனை நடத்துவதால் அவரது அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும்? என்பது அரசியல் களத்தில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

You must be logged in to post a comment.