தவெகவின் உயர்மட்ட மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் செயல்படுவார் விஜய் அறிவிப்பு..

தவெக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையனை நியமித்து கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

கூடுதலாக ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து இன்று(நவ. 27) சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்வில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

செங்கோட்டையனுக்கு தவெகவில் என்ன பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்.

“தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர்: தாம் சார்ந்திருந்த கழகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்; அனைவரிடத்திலும் எளிமையோடும் அன்போடும் பண்போடும் பழகி, நன்மதிப்பைப் பெற்றவர்; மூத்த அரசியல் தலைவர். முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று முதல் நம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அண்ணன் செங்கோட்டையன், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட, எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) நியமிக்கப்படுகிறார். இவர் இக்குழுவை வழிநடத்தி, கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க எனக்கு உறுதுணையாகச் செயல்படுவார்.

மேலும் கூடுதலாக, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார். என்னோடும் கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்துடனும் கலந்தாலோசித்து கழகப் பணிகளை மேற்கண்ட இம்மாவட்டங்களில் மேற்கொள்வார்.

மேலும், அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சத்தியபாமா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் வெங்கடாசலம், முத்துக்கிருஷ்ணன் மற்றும் பிற புதிய உறுப்பினர்களையும் வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கழகத் தோழர்களும் நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!