அனுமன் ஜெயந்தி: 1 லட்சம் வடைமாலையில் ஜொலிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல்: மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இந்த ஆண்டு இன்று டிசம்பர் 25 ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன் அனுமன் சிரஞ்சீவியாக இந்த மண்ணில் இருக்கிறார். ராம நாமம் கேட்கும் இடங்களில் அஞ்சநேயர் அமர்ந்திருப்பார் என்று நம்பப்படுகிறது. ராமாயண காவியத்தில் ஈடு இணையற்ற இடத்தைப் பிடித்தவர் அனுமன். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் ராமபிரானின் சேவகன் அனுமனை அவதரித்த நாளில் வணங்கினால் தொல்லைகள் தீரும். திதிகளில் புண்ணியமான திதி அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூலநட்சத்திரம். சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன். அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

அனுமன் ஜெயந்தி விழா நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். அனுமனுக்கு லட்சத்து எட்டு வடைமாலை ஜெயந்தி விழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை அணிவிக்கபட்டது. இந்த வடைகளை தயாரிக்க 2,250 கிலோ உளுந்தம் பருப்பு மற்றும் 650 கிலோ நல்ல எண்ணெய், 35 கிலோ மிளகு, சீரகம், உப்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டது.பிரசித்திபெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமியின் சிலை 18 அடி உயரம் கொண்டது. நாமக்கல் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள மலைக்கோட்டையின் மேற்குப் பகுதியில் கோயில் அமைந்துள்ளது. நின்றகோலத்தில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலில் நாள்தோறும் கட்டளைதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்ககவசம், வெள்ளி கவசம், முத்தங்கி, சந்தனம் உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம். இன்று அலங்காரம் செய்யப்படுவதற்கு முன்னதாகப் பால், தயிர், மஞ்சள் உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

செய்தி : N.P.ரமேஷ், நேரு நினைவு கல்லூரி,திருச்சி.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!