திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 141 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று மாலை 5.40 மணிக்கு புறப்பட்டது. விமானம் மேலே எழும்பியதும் அதன் சக்கரங்கள் உள்ளே சென்று விடும். ஆனால், இந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. இதனால், அதனை மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதனால், விமானம் தொடர்ந்து வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்தது. விமானத்தின் எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்து விட்டு அதன்பின்னர், தரையிறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஒருபுறம் சக்கரங்களை இயக்கவும் முயற்சி நடந்து வந்தது.
இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள், 4 தீயணைப்பு வாகனங்களும் திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இதனால், விமானத்தில் 2 மணிநேரத்திற்கும் மேலாக பயணிகள் தவித்து வந்தனர்.விமானம் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 26 முறை வானில் வட்டமடித்து கொண்டிருந்தது. இந்நிலையில், விமானம் 8.15 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கி உள்ளது. பயணிகள் மற்றும் அவர்களின் உறவினர்களும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். இதனால், விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தில் இருந்து சென்ற பயணிகள் பலர் விமானத்தில் இருந்து உள்ளனர். அவர்கள் சார்ஜாவுக்கு பணிக்கு செல்வதற்காக விமானத்தில் பயணித்துள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.
You must be logged in to post a comment.