முன்னுரை:-
பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் பலர். ஆனால் இக்கட்டுரையின் ஆசிரியர் கப்ளி சேட், பயணத்துடன், மனிதனுள் ஏற்பட வேண்டிய சிந்தனைகளை தூண்டி, அதை தேவைப்படும் இடங்களில் குர்ஆனின் உள்ள படிப்பினைகளையும் சுற்றி காட்டியுள்ளது இக்கட்டுரையின் மிகப் பெரிய பலமாகும். இக்கட்டுரை தொடர்ச்சியாக உங்கள் பார்வைக்கு வர உள்ளது. உங்களுடைய கருத்துக்களை கட்டுரையின் ஆசிரியரை 9443440950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
பெருநகரங்களில் இன்று மால்களின் கலாச்சாரம் கொடிகட்டி பறக்கிறது. ஒரு மிகப் பெரும் வளாகத்தில் ஏராளமான எல்லா வகைக் கடைகளோடு வகைவகையான உணவுக்கடைகள். பொழுதுபோக்க ஏராளமான சினிமா திரைகள், நாடகங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், மக்கள் கலந்துகொண்டு விளையாடி பரிசுபெறும் நிகழ்ச்சிகள் என ஒவ்வொரு மெகாமால்களும் ஒரு உலகமாக மாறி இருக்கிறது. முழுதும் குளிரூட்டப்பட்டு வண்ணவண்ண விளக்குகளின் மின்னுதல்களும் பலவகைப்பட்ட பர்னிச்சர்களும், இருக்கைகளும் நிச்சயம் புதிய அனுபவங்கள். “எல்லாமே ஒரே கூரையின் கீழே” என்ற கலாச்சாரம் கட்டமைக்கப்படுகிறது. பள்ளிகளின் கல்லூரிகளின் மாணவ, மாணவியர்களும் தங்கள் பொழுதுகளை கழிக்க இங்கு தஞ்சமடைகின்றனர்.
செயற்கைத்தனமாக விலையேற்றப்பட்ட பொருள்களும் நுனிநாக்கு ஆங்கிலமுமாக போலி கலாச்சாரங்களின் புகலிடங்களாக மால்கள் இன்று திகழ்கின்றன. பெரியநகரங்களில் பல நூறுகோடிகளில் அமைக்கப்பட்டிருக்கும் கிஷ்கிந்தாக்களும், பிளாக்தண்டர்களும் பொழுதையும் காசையும் ஒரு சேர உறிஞ்சிவிடுகின்றன. மும்மையின் SL world தண்ணீருக்கு நடுவில் அமைந்துள்ளது. ரோட்டின் வழியாகவும், படகுகளின் வழியாகவும் சென்றடையலாம். ஏராளமான விளையாட்டுக்கள், குழந்தைகளுக்கான வரப்பிரசாதங்கள். ராட்டனங்களின் வகைகளும், ரெயின்போ போன்ற விளையாட்டுகளும், மயிர்கூச்செறிய வைப்பவை. இவைகளைத் தாண்டி நீர்விளையாட்டுகள், நிறைய உள்ளன. நீரை சுத்தகரித்து பயன்படுத்தினாலும் விளையாடிவிட்டு குளியறையிலே குளித்துவிட்டு வரவேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிற இதுபோன்ற விளையாட்டுகள் கவர்ச்சியாகவே உள்ளது. இன்றைக்கு இயற்கையாகவே பரந்துவிரிந்திருக்கிற காடுகளில் இயற்கையாகவே மிருகங்களை உலவவிட்டுவிட்டு மனிதர்களை கூண்டு வண்டியில் ஏற்றிச்சென்று வேடிக்கை பார்க்கவைப்பது நகைச்சுவை முரண். தேக்கடி போன்ற இடங்களில் மனிதர்கள் படகுகளில் சவாரி போய் நீர்நிலைகளுக்கு நீர் அருந்தவரும் மிருகங்களை பார்க்க ஆர்வப்படுவது ஆச்சரியம்.!
சிதம்பரம் அருகிலுள்ள பிச்சாவரம் சுந்தரவதனக் காடுகளால் சூழப்பட்டுள்ளது. படகுச்சவாரியில் சூழ்ந்திருக்கும் மரங்களை சுற்றிக் கொண்டே நீண்டநேரம் பயணம் செல்லலாம். இந்தியாவில் இருக்கும் சிறப்பான சதுப்புநில சுந்தரவனக்காடுகளின் இரண்டு இடங்களில் பிச்சாவரம் ஒன்று. சினிமாபாடல் காட்சிகளின் தொட்டில் இது. டூயட்பாடிக்கொண்டே இருக்கிறார்கள்.
இறுதியில் வரும் கடற்கரையில் மனிதசஞ்சாரமும் மனிதகாலடிகளும் அதிகம் இல்லை. எல்லோரும் அந்தக்கடற்கரைக்கு செல்வதுமில்லை. அமைதிவிரும்புவர்கள் அந்தவெண் மணற்பரப்பில் கால்புதைய நடக்க கட்டாயம் விரும்புவர். கன்னியாகுமரிக் கடலின் சூரிய உதயமும், சூரிய அஸ்தமனமும் பாருங்கள். புதியகருக்கலையும், புதிய விடியலையும், புதிய சூரியனையும் கண்டு ரசிப்பீர்கள். படகில் சென்று விவேகானந்தர் பாறையின் அந்த குகையில் மௌனித்துவிட்டு வாருங்கள். மேற்கில் அரபிக்கடலும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் இந்தியப்பெருங்கடலும் சங்கமிக்கிற முக்கூடலான குமரிமுனையை பார்க்கவேண்டும். மூன்றுகடல்களின் நீரின் வண்ணங்களையும், அடர்த்தியையும் காணும் நாம் திருக்குர்ஆன் கூறும் கடலின் நீர்களிடையே திரை இருப்பதை அறிந்து பாடம் படிக்கலாம்..!
குதூகலங்களை தொடர்ந்து பேசுவோம்..!
இறைவன் நாடட்டும்..!
கப்ளிசேட்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print














