அரசு பேருந்துகளில் கட்டணம் தற்போது உயர்த்தப்படமாட்டாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
பெரம்பலூர் தனியார் பல்கலைக் கழக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். இந்த விழாவில் 2 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.இதனைத் தொடர்ந்து, அமைச்சா் சிவசங்கர் செய்தியாளா்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், தனியார் ஆம்னி பேருந்துகளில் உள்ளதைபோல கைப்பேசிகளுக்கு மின்னூட்டம் செய்யும் வசதி மற்றும் படுக்கை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாட்டிலேயே சுமாா் 20 ஆயிரம் பேருந்துகள் உள்ள மிகப்பெரிய போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகமாகும்.
தற்போது, புதிதாக 600-க்கும் மேற்பட்டோர் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். புதிதாக 7,500 பேருந்துகள் வாங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதிதாக 7,500 பேருந்துகள் வாங்கி, 685 பேரை பணியமா்த்தியுள்ளோம்
இலவசம் கொடுத்ததால்தான் போக்குவரத்துத் துறை உயிா் பெற்றுள்ளது. நிகழாண்டு ரூ. 2,500 கோடி போக்குவரத்துக் கழகத்துக்கு முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மகளிருக்கான இலவசப் பேருந்து திட்டத்தை கிண்டல் செய்வதை விடுத்து மக்களுக்குப் பணியாற்ற வேண்டும். பேருந்துக் கட்டணம் உயா்வு என்பது தற்போது கிடையாது. இதர மாநிலங்களில் டீசல், பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயா்த்தாமலேயே போக்குவரத்துக் கழகத்தை நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
You must be logged in to post a comment.