தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் அடுத்த 2 நாட்கள் நடந்தது. தொடர்ந்து, பிப்ரவரி 15-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.அதன்பிறகு, பிப்ரவரி 19-ந்தேதி சட்டசபை மீண்டும் கூடியது. அன்றைய தினம் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த 2 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று, அமைச்சர்கள் பதில் உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.அதனைத்தொடர்ந்து, துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காக ஜூன் 20-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 10 நாட்கள் சட்டசபை கூட்டம் நடந்தது.பேரவை விதிகளின்படி, சட்டசபை கூட்டம் முடிவுற்ற நாளில் இருந்து 6 மாதத்துக்குள் மீண்டும் கூடியாக வேண்டும்.அந்த வகையில், பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.தொடர்ந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் ராணுவ தலைமை தளபதி எஸ்.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஈ.சி.ஐ. திருச்சபையின் பேராயர் எஸ்றா சற்குணம், பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.அதன் பின்னர், கேள்வி நேரம் தொடங்குகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.தொடர்ந்து, 2024-2025-ம் ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பின்னர், அரசினர் தனித் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட இருக்கிறது.அதாவது, மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், 2024-2025-ம் ஆண்டு துணை பட்ஜெட் மீது விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளிக்க இருக்கிறார். தொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டம் நிறைவடையும்.அடுத்து, புத்தாண்டில் (2025) ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டசபை கூடும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









