கனமழை காரணமாக தமிழகத்தில் தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும்(டிச.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
நாளை(டிச.14) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்…
1, தென்காசி- பள்ளி, கல்லூரிகள்.
2, நெல்லை- பள்ளி, கல்லூரிகள்.
3, தூத்துக்குடி- பள்ளி, கல்லூரிகள்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்திருப்பதாவது, நேற்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (13 -12-2024) லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக் கூடும்.
நாளை (14-12-2024) தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும்.
13-12-2024: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
14-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.