இன்று (வெள்ளிக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.76,000-ஐ நெருங்கி நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை காரணமாக தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஜனவரி தொடக்கத்தில் ஒரு பவுன் ரூ.58 ஆயிரமாக இருந்தது.
பின்னர், போர் பதற்றம் உள்பட பல காரணங்களால், தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து ஜூலை 23-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.75,040 என்ற உச்சத்தை அடைந்தது. பின்னர், ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், நேற்று புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.75,200-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.9.400-க்கு விற்கப்பட்டது.
அந்தவகையில் ஆகஸ்ட் 2 முதல் 7-ம் தேதி வரை தங்கம் விலை பவுனுக்கு ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று (ஆக.8) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,470-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.75,760-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.127-க்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,27,000-க்கு விற்கப்படுகிறது.
You must be logged in to post a comment.