ஆம்புலன்ஸ் உருவான வரலாறு:இன்று ஆம்புலன்ஸ் தினம்..!

ஆம்புலன்ஸ் உருவான வரலாறு:

இன்று ஆம்புலன்ஸ் தினம்

உயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ் இன்று (ஜன.8) முதலுதவி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் என “மினி மொபைல் ஆஸ்பத்திரி’யாக வலம் வருகிறது.

இந்த ஆம்புலன்ஸ் உருவான வரலாறு 17ம் நூற்றாண்டில் துவங்குகிறது. அந்த காலக்கட்டத்தில் காயம்பட்ட போர் வீரர்களை சிகிச்சை மையத்திற்கு எடுத்துச் செல்ல, இரு மூங்கில் கம்புகளில் இணைக்கப்பட்ட துணியை (ஸ்டிரெச்சர்) பயன்படுத்தினர். இதுதான் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உருவாகுவதற்கான கரு எனலாம். பின், குதிரை வண்டி, மோட்டார் வாகன வண்டி ஆம்புலன்ஸ் என பல பரிமாணங்களை பெற்றன. கி.பி. 18ம் நூற்றாண்டில் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி கூட, தென்னாப்பிரிக்காவில் “இந்தியன் ஆம்புலன்ஸ் கிராப்ஸ்’ என்ற நிறுவனத்தை துவக்கி, ஸ்டிரெச்சர் தூக்கும் ஊழியராகவும் இருந்தார். இந்தியாவில் முதன்முறையாக 1914ல் மும்பையில் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பணம் கொடுத்து அழைத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ், 2005 ஆகஸ்ட்டில் “108′ என்ற பெயரில், இலவச ஆம்புலன்ஸ் திட்டமாக, ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 3000 ஆம்புலன்ஸ்கள் இலவச சேவையில் ஈடுபட்டுள்ளன. அவசர கால மேலாண்மை ஆராய்ச்சி மையம் இதை நிர்வகிக்கிறது. இடத்தின் தன்மைக்கு ஏற்ப, “108′ ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்படுகிறது. நீர்நிலைகள் அதிகமுள்ள அசாமில் படகையே ஆம்புலன்சாக மாற்றி உள்ளனர். மலைப்பகுதியான உத்தரகாண்ட் மாநிலத்தில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

“108’ஐ குறிக்கும் வகையில், ஆண்டின் முதல் மாதமான இந்த ஜனவரியில், 8 ம் தேதியான இன்று ஆம்புலன்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

செய்தியாளர், வி. காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!