இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், 19 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் ஷிப் கோப்பையை வென்றது. கோப்பை வென்ற தமிழ்நாடு காவல் துறையினருக்கு பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். 25-வது அகில இந்திய காவல் துறை துப்பாக்கி சுடும் போட்டி 2024-2025 நிறைவு விழா 21.03.2025 அன்று எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியானது துப்பாக்கி சுடும் வீரர்களின் அசாத்திய திறமை மற்றும் அசாதாரண குறிபார்த்து சுடும் திறன்களை வெளிப்படுத்தியது. துப்பாக்கி சுடும் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிக் கொணர கடுமையாக போராடினர்.



சிறப்பு விருந்தினரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத் தலைவர் சங்கர் ஜிவால் வரவேற்று ஏற்பாட்டு குழு உறுப்பினர்கள், நடுவர் குழுவினர்கள், குழு மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சரிடம் அறிமுகம் செய்தார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் அலங்கார காப்பு அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். ஒழுங்கு, ஒற்றுமை மற்றும் பெருமை ஆகியவற்றின் அடையாளமாக தோழமை உணர்வை வெளிப்படுத்தும் வகையில், இப்போட்டியில் பங்கேற்ற அணிகளின் அணி வகுப்பு மரியாதையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் பெற்றுக் கொண்டார்.
காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத் தலைவர் சங்கர் ஜிவால், வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அகில இந்திய காவல்துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதி உரையாற்றினார். பின்பு போட்டியாளர்களுக்கு இடையேயான ஆரோக்கியமான போட்டி உணர்வையும், தமிழ்நாடு காவல் துறையின் நேர்த்தியான அணுகு முறையையும் பாராட்டினார். துப்பாக்கி சுடும் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் பதக்கங்களும் பரிசு கோப்பைகளும் வழங்கினார்.
பல்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்ற வீரர்களின் விபரம் பின்வருமாறு: ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் கோப்பையை (சிறந்த அணி) அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படையும், இரண்டாவது இடத்தை எல்லை பாதுகாப்பு படையும், மூன்றாவது இடத்தை அசாம் மாநில காவல் துறையும் பிடித்தனர். பிஸ்டல் / ரிவால்வர் துப்பாக்கி சுடும் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை (சிறந்த அணி) மத்திய சேமக் காவல் படையும், இரண்டாவது இடத்தை அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படையும், மூன்றாவது இடத்தை தமிழ்நாடு காவல் துறையும் பிடித்தார்கள்.
கார்பைன் /ஸ்டென்கன் துப்பாக்கி சுடும் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் கோப்பையை (சிறந்த அணி) இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையும், இரண்டாவது இடத்தை ஒடிசா மாநில காவல் துறையும், மூன்றாவது இடத்தை அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படையும் பிடித்தனர். அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டு ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் கோப்பையை அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படையும், இரண்டாவது இடத்தை எல்லை பாதுகாப்பு படையும் பிடித்தார்கள்.
மாநிலங்களுக்கு இடையே ஒட்டு மொத்தமாக சிறப்பாக செயல்பட்ட அணியாக சாம்பியன் ஷிப் கோப்பையை தமிழ்நாடு காவல் துறையும், அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை ஒடிசா மாநில காவல் துறையும் பிடித்தனர். பிஸ்டல் /ரிவால்வர் துப்பாக்கி சுடும் பிரிவில் சிறப்பு பாதுகாப்பு படை ஆய்வாளர் அமர் சிங் சிறந்த சுடுதலுக்கான (Best Shot) பரிசையும், கார்பைன் / ஸ்டென்கன் துப்பாக்கி சுடும் பிரிவில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை காவலர் விஷால் குமார் சிறந்த சுடுதலுக்கான (Best Shot) பரிசையும் வென்றார்கள். பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் உதியநிதி ஸ்டாலினால் நினைவுப்பரிசு வெளியிடப்பட்டது. மேலும் 25-வது அகில இந்திய காவல் துறை துப்பாக்கி சுடுதல் போட்டி 2024-2025 நிறைவு பெற்றதாக அறிவித்தார்.
பின்னர், 25வது அகில இந்திய காவல் துறை துப்பாக்கி சுடுதல் போட்டி நிறைவு பெற்றதை முன்னிட்டு அகில இந்திய காவல் துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரிய கொடியை சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத் தலைவரிடம் ஒப்படைத்தார். தமிழ்நாடு பேண்ட் வாத்திய குழுவினரின் பேண்ட் வாத்திய நிகழ்ச்சியுடன் நிறைவு விழா இனிதே முடிவுற்றது.
You must be logged in to post a comment.