தமிழக அமைச்சராக இன்று(ஏப். 28) மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்.
அமைச்சர் மனோ தங்கராஜுக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக, அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தனா்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று அந்த ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆர். என். ரவி, அமைச்சரவை மாற்றத்துக்கும் ஒப்புதலை அளித்தார்.
அதன்படி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கருக்கு கூடுதல் பொறுப்பாக மின்துறையும், வீட்டு வசதித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையும், பால்வளத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வனத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் பத்மநாபுரம் தொகுதி எம்எல்ஏ டி.மனோ தங்கராஜ் மீண்டும் சோ்க்கப்பட்டுள்ள நிலையில், இவருக்கு பால் வளத் துறை ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில், நீதிமன்றத் தலையீடு காரணமாக தற்போது அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.