ஆவின் நெய் விற்பனை விலை உயர்வு; ஜிஎஸ்டி வரி குறைப்பை வைத்து நாடகமாடிய ஆவின் நிர்வாகத்தின் சாயம் வெளுத்தது.! பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு..

கடந்த செப்டம்பர் 3ம் தேதி நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மத்திய அரசு ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்ததன் அடிப்படையில் UHT பால் மற்றும் பனீர் வகைகளை 5% ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளித்தும், நெய், வெண்ணெய், சீஸ் உள்ளிட்ட பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டியை 12% லிருந்து 5% ஆகவும், ஐஸ்கிரீம் வகைகளை 18% லிருந்து 5% ஆகவும் ஜிஎஸ்டி குறைப்பு செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்தது.

செப்டம்பர் 22முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமுலுக்கு வந்த உடன் அமுல், நந்தினி, பாண்லே உள்ளிட்ட பல்வேறு மாநில கூட்டுறவு பால் நிறுவனங்கள் மட்டுமின்றி தனியார் பால் நிறுவனங்களும் ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயனை முழுமையாக பொதுமக்களுக்கு வழங்க கூடிய வகையில் மேற்கண்ட பால் பொருட்களுக்கான விற்பனை விலையை குறைத்து, ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிந்தைய முழுமையான புதிய விலைப்பட்டியலையும் வெளியிட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் மட்டும் ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயனை பொதுமக்களுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் விலை குறைப்பு செய்யாமலும், ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிந்தைய முழுமையான புதிய விலைப்பட்டியலை வெளியிடாமலும் அக்டோபர் 30ம் தேதி வரை பண்டிகை கால தள்ளுபடி விலையில் வழங்குவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. (19.09.2025 தேதியிட்ட நிர்வாக இயக்குனர் திரு. A.அண்ணாதுரை ஐஏஎஸ் அவர்களின் கடிதம் Ref. No. 3331/N3/Mkg/2025)

ஆவின் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்களையும் ஜிஎஸ்டி கவுன்சிலையும் ஏமாற்றும் செயல் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அன்றைய தினமே கடும் கண்டனத்தை பதிவு செய்ததோடு, பண்டிகை காலம் முடிந்த உடன் நெய், பனீர், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை விலையை ஆவின் நிர்வாகம் மீண்டும் உயர்த்தி விடும் என எச்சரிக்கையும் செய்ததோடு ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயனை முழுமையாக பொதுமக்களுக்கு வழங்கிட பண்டிகை கால தள்ளுபடி என்பதை விற்பனை விலை குறைப்பு என அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது.

மத்திய அரசின் GST கவுன்சிலின் வரி சீர்திருத்த முடிவிற்கு கட்டுப்பட்டு, ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு ஏற்ப பால் பொருட்களின் விற்பனை விலையை குறைக்க முன்வரவில்லை என்பதால் இது ஜிஎஸ்டி கவுன்சிலை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்யும் முயற்சியாகவும், மத்திய அரசின் நல்லெண்ண நடவடிக்கைகள் மக்களுக்கு செல்வதை தடுக்கும் செயலாகவும் இருக்கிறது எனக் கூறி மத்திய அரசும், ஜிஎஸ்டி கவுன்சிலும் ஆவின் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் 24ம் தேதி சென்னையில் உள்ள ஜிஎஸ்டி தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் புகார் அளித்திருந்தோம்.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது ஜிஎஸ்டி கவுன்சில் நடவடிக்கை எடுக்காத சூழலில் ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயனை முழுமையாக பொதுமக்களுக்கு வழங்காத ஆவின் நிர்வாகம், ஆவின் நெய் விற்பனைக்கு ஏற்கனவே அறிவித்திருந்த பண்டிகை கால தள்ளுபடியை இன்று முதல் (01.12.2025) நிறுத்தி விட்டு ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு முந்தைய விற்பனை விலையை அமுலுக்கு கொண்டு வந்து நெய் விற்பனைக்கான விலையை லிட்டருக்கு 40.00ரூபாயும், 500மிலிக்கு 20.00ரூபாயும், 5லிட்டருக்கு 350.00ரூபாயும், 15கிலோவிற்கு 1155.00ரூபாயும் உயர்த்தி 28.11.2025தேதியிட்ட (Ref. No. 3331/N3/Mkg./2025) கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ள ஆவின் நிர்வாகத்தை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏற்கனவே ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு நெய், பனீர், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களுக்கான விற்பனை விலையை நேரடியாக குறைக்காமல் தள்ளுபடி விலை என நாடகமாடி மக்களையும், ஜிஎஸ்டி கவுன்சிலையும் ஏமாற்றிய ஆவின் நிர்வாகம் மீண்டும் ஒரு முறை மக்களை ஏமாற்றி, மக்கள் மீது நிதிச் சுமையை ஏற்றுவது ஏற்றுக் கொள்ள முடியாதது

எனவே ஆவின் நெய்க்கு அமுலில் இருந்த தள்ளுபடி விற்பனை விலையை விலக்கப்பட்டுள்ளதையும், பொதுமக்கள் தலையில் திணிக்கப்பட்டுள்ள விற்பனை விலையை உயர்வையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயனை பொதுமக்களுக்கு முழுமையாக, நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசையும், ஆவின் நிர்வாகத்தையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி;

சு.ஆ.பொன்னுசாமி நிறுவனர் மாநில தலைவர் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!