FIDE உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேஷ் என்ற தமிழ்நாட்டு செஸ் வீரருக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.20 லட்சத்திற்கான காசோலை முதல்வரால் இன்று வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 13.03.2025 இன்று தலைமைச் செயலகத்தில், மொண்டெனேகுரோ நாட்டின், பெட்ரோவாக்கில் நடைபெற்ற FIDE உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷை பாராட்டி உயரிய ஊக்கத் தொகையாக 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி வாழ்த்தினார்.
தமிழ் நாட்டினை விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ் நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத் தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில், பெட்ரோவாக்கில் நடைபெற்ற FIDE உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான பிரணவ் வெங்கடேஷ் வெற்றி பெற்று வரலாறு படைத்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் உயரிய ஊக்கத் தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். பிரணவ் வெங்கடேஷ், 2022-ஆம் ஆண்டில், கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேஷிற்கு பரிசு தொகையாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, பிரணவ் வெங்கடேஷின் பெற்றோர் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.