ஓட்டுபோட சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப சிறப்பு பஸ் மற்றும் ரெயில்கள் இன்று முதல் இயக்கம்..

பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக நேற்று அரசு பொது விடுமுறை அறிவித்து இருந்தது. தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு கட்டாயம் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தததால் சொந்த ஊர்களுக்கு 17, 18 ஆகிய தேதிகளில் புறப்பட்டு சென்றனர்.சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தங்கி வேலை செய்து வந்த கூலி தொழிலாளர்கள், ஊழியர்கள் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதற்காக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கின. தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கியது.இந்த நிலையில் ஓட்டு போட சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக கூடுதலாக பஸ் வசதியை அரசு போக்குவரத்து கழகங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் செய்துள்ளது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு சனி, ஞாயிறு தொடர் விடுமுறை கிடைப்பதால் 22-ந்தேதி (திங்கட்கிழமை) வேலைக்கு செல்ல வசதியாக பெரும்பாலும் நாளை பயணத்தை தொடர்வார்கள்.அதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை, சேலம், ஓசூர், திருப்பூர், சிதம்பரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் விடப்பட்டுள்ளது.வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட பிற பகுதிகளிலும் சிறப்பு பஸ்கள் நாளை பிற்பகல் முதல் இயக்கப்பட உள்ளன.தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் விடப்பட்டு உள்ளது. இந்த ரெயில் தூத்துக்குடியில் இன்று மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு நாளை அதிகாலை 3.50 மணிக்கு வந்து சேருகிறது. பின்னர் 4.45 மணிக்கு சென்ட்ரல் நிலையம் சென்றடைகிறது.இந்த சிறப்பு ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படாதவை. இந்த ரெயில் மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக இயக்கப்படுகிறது.மற்றொரு சிறப்பு ரெயில் திருச்சியில் இருந்து எழும்பூருக்கு இன்று இயக்கப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்ட ரெயில் பகல் 1.20 மணிக்கு எழும்பூர் வந்து சேர்ந்தது.இதே போல் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தாம்பரத்தில் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு நாளை காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து நாளை பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. சிறப்பு ரெயில்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கூறும்போது நாளை (ஞாயிற்றுக்கிழமை) பயணம் செய்ய 34 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மொத்தம் 1.25 லட்சம் இடங்கள் உள்ளன. பொதுமக்கள் நெரிசலை தவிர்க்க அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!