தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் முதல்கட்டமாக 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் வருகிற 19ம் தேதி (வெள்ளி) வாக்குப்பதிவு நடக்கிறது. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் சென்ற பணம், நகை, மதுபானம், போதைபொருள், பரிசு பொருட்கள் என சுமார் ரூ.305 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பொது பார்வையாளர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள், போலீஸ் பார்வையாளர்களும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். இந்த பணிகளை மேலும் அதிகரிக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நேற்று டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் இந்திய தேர்தல் ஆணையர்கள் கயனேஷ்குமார், சுக்பீர்சிங் சர்து ஆகியோர் முன்னிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள், பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள், காவல்துறை பார்வையாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சிறப்பு தேர்தல் பார்வையாளர் பி.ஆர்.பாலகிருஷ்ணன் (ஐஆர்எஸ்-ஓய்வு), கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் சங்கர்லால் குமாவத், இணை தலைமை தேர்தல் அலுவலர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளில் இருந்தபடி பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள், போலீஸ் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிய ரசீதுகள், ஆவணங்களுடன் மட்டுமே பணம், ஆபரணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். ரூ.50 ஆயிரம் வரை ரொக்கப் பணத்தை எடுத்துச் செல்ல எந்தத் தடையும் இல்லை. தகுந்த ஆவணங்கள் இல்லாமல் அதிகளவு பணத்தை எடுத்துச் செல்வது வாகன சோதனைகளின் போது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். அந்த வகையில், தோ்தல் நடத்தை விதி அமலாக்கப்பட்டதில் இருந்து வியாழக்கிழமை காலை 9 மணி வரையிலான காலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.144.44 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.5.13 கோடி மதிப்புடைய மதுபானங்களும், ரூ.94 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களும், ரூ.121.76 கோடி மதிப்புடைய ஆபரணங்களும், ரூ.33.08 கோடி மதிப்பிலான பரிசுப் பொருள்களும் பறிமுதல் ஆகியுள்ளன. ரொக்கத் தொகையுடன் சோ்த்து அவற்றின் மொத்த மதிப்பு ரூ.305.36 கோடி என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









