எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள், திமுக அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்ட செயலாளர்கள், முக்கியமான மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேர்தல் பிரசாரம், தேர்தல் வெற்றி வாய்ப்பு, தேர்தல் பணிகள், கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவது போன்றவை குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பேசியதாவது: நம்முடைய கூட்டணிக்கட்சியினர் தோளோடு தோளாக நீண்டகாலமாக கொள்கை உணர்வுடன் பயணிக்கிறார்கள். அதனால் நட்புணர்வோடு கலந்து தொகுதிப் பங்கீடு செய்திருக்கிறோம். சில தொகுதிகளைப் பெற்று சில தொகுதிகளை விட்டுக் கொடுத்திருக்கிறோம். பலம் வாய்ந்த பெரிய கூட்டணியில் இது இயல்பானது. தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம், தமிழ்நாட்டோட நலன் முக்கியம், நாட்டோட எதிர்காலம் தான் முக்கியம் என்ற வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும். மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் அவரவர் மாவட்டங்களைச் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குகளைக் கூடுதலாக பெற்று தரும் பொறுப்பு சாரும்.
ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு குறைந்தாலும் அதற்கு அந்த மாவட்டச் செயலாளரும், பொறுப்பு அமைச்சரும் தான் பொறுப்பு. தொகுதி மட்டுமில்லாமல் தேர்தலுக்குப் பிறகு, ஒன்றிய, நகரம், பகுதி, பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தின் பட்டியலை எடுக்கப் போகிறேன். எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை இப்பவே சொல்லி விடுறேன். இதை மிகவும் கண்டிப்புடன் சொல்லுகிறேன். எல்லா தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணம் தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும். கூட்டணி கட்சிகளையும் இணைத்து தேர்தல் பணிக் குழுக்களை அமைக்க வேண்டும். போஸ்டர்கள், துண்டறிக்கைகளில் அனைத்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் படங்களுக்கும் கட்டாயம் இடம் கொடுக்க வேண்டும். வேட்பாளர் யாராக இருந்தாலும் அரவணைத்து மக்களிடம் அழைத்துச் செல்லுங்கள்.
வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்பது தான் ரொம்ப முக்கியம். மக்களை நேரடியா சந்திக்க வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் தான், தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டுவர முடியும். இந்தியா கூட்டணி பெறப்போகும் வெற்றி சமூகநீதிக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான கருத்தியல்களை தமிழ்நாட்டில் விதைக்கலாம் என்ற எண்ணமே, இனிமேல் பாசிச வெறிபிடித்த பாஜவுக்கு கனவிலேயும் வரக்கூடாது. அப்படிப்பட்ட மாபெரும் வெற்றியை நாம் பெற வேண்டும். புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெற போகிறோம் என்பது உறுதி. ஜூன் 4ம் தேதி வெற்றிச் செய்தியோடு வந்து என்னைச் சந்தியுங்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









