மோடிக்கு தமிழ்மீது பற்று இருப்பதாக பாஜக கூறுவது உண்மையெனில், ரயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்றுங்கள்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்மீது பற்று இருப்பதாக பாஜக கூறுவது உண்மையெனில், ரயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால், தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, மும்மொழிக் கொள்கையால் தாய்மொழிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் பிரதமர் மோடிக்கு தமிழ் மீது மிகுந்த அக்கறை இருப்பதாகவும் பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”பிரதமருக்கு தமிழ் மீது மிகுந்த பற்று இருப்பதாக பாஜக கூறுவது உண்மையெனில், அது ஏன் ஒருபோதும் அவரது செயல்பாட்டில் பிரதிபலிக்கவில்லை?

நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவுவதற்குப் பதிலாக தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்தியை நீக்கவும். வெற்றுப் பாராட்டுக்கு பதிலாக, சமஸ்கிருதம் போன்ற இறந்த மொழியைவிட தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கவும். ஹிந்திக்கு இணையான அலுவல் மொழியாக தமிழை மாற்றவும்.

திருவள்ளுவரை காவிமயமாக்கும் தீவிர முயற்சிகளை நிறுத்தி, காலத்தால் அழியாத அவரது திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கவும். மத்திய பட்ஜெட்டின்போது குறள்களை மேற்கோள் காட்டுவதுடன் நின்றுவிடாமல், சிறப்பு திட்டங்கள், பேரிடர் நிவாரண நிதி, புதிய ரயில்வே திட்டங்களை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இயங்கும் அந்த்யோதயா, தேஜஸ்ம், வந்தே பாரத் போன்ற ரயில்களுக்கு சமஸ்கிருதப் பெயர்களை திணிப்பதை நிறுத்துங்கள். தமிழ்நாட்டின் ரயில்களில் செம்மொழி, முத்துநகர், வைகை, மலைக்கோட்டை, திருக்குறள் போன்ற தமிழ் பெயர் வைக்கும் நடைமுறைக்கு திரும்பவும்.

தமிழ் மீதான பற்றை செயல் மூலம் நிரூபிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!