மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம்..

மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு அவர் இன்று (வெள்ளிக்கிழமை) எழுதியுள்ள கடிதத்தில், பெரியார் எனும் மாமனிதர் கொண்டிருந்த இலட்சிய வைராக்கியத்தின் தொடக்கம்தான் அவர் பங்கேற்ற வைக்கம் போராட்டம். அந்தப் போராட்டத்தில் கிடைத்த வெற்றி என்பது இலட்சிய நோக்கத்துடன் பயணிக்கும் இயக்கத்திற்கு கிடைத்த மிகப் பெரிய உந்துசக்தி. அதன் தொடர்ச்சிதான் திராவிட இயக்கத்தின் கொள்கைப் பயணம்.

அந்தப் பயணம் அரசியல் களத்திலும் தொடர்ந்ததன் விளைவாகத்தான் இந்திய அளவிலான இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம், அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் உள்ளிட்டவையாகும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற வள்ளுவர் நெறிப்படி, அனைத்துச் சமுதாய மக்களும் ஒரே இடத்தில் வாழும் சமத்துவபுரங்களைத் தமிழ்நாட்டில் உருவாக்கினார் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்குத் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் என்று பெயர் சூட்டினார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு சமத்துவக் குடியிருப்பு அமைக்கப்பட்டதில்லை என்பதால்தான் நம் தமிழ்நாட்டைப் பெரியார் மண் என்று போற்றுகிறோம்.

மக்களைப் பிளவுடுபத்தி, மாநிலங்களைச்சிறுமைப்படுத்தி ஆளத் துடிப்பவர்களுக்குப் பெரியார் என்றாலும், சமத்துவம் என்றாலும், சமூகநீதி என்றாலும் இவையனைத்தையும் ஒன்றாக்கிய திராவிட மாடல் என்றாலும் எரிச்சல் ஏற்படுகிறது, வன்மம் வெளிப்படுகிறது. வைக்கத்தில் நூற்றாண்டு விழா நடத்தப்பட்ட அதே நாளில், ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் ஜனநாயக விரோதத் திட்டத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அமைச்சரவை ஒப்புதல் அளித்துக் கொடுங்கோன்மைக்கு வழி வகுக்க நினைக்கிறது.

நடைமுறைச் சாத்தியமில்லாத – மக்களாட்சி முறைக்கு விரோதமான – கூட்டாட்சித் தத்துவத்தைக் குற்றுயிராக்கும் ஒரே நாடு – ஒரே தேர்தல் முறைக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 14-2-2024 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வைக்கம் விழாவில் பேசிய கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனும், மாநிலங்களின் சுயமரியாதைக்காக நாம் எழுந்து நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். சுயமரியாதை இயக்கம் கண்டு அதன் வழியாகத் திராவிட இனத்தின் சுயமரியாதையை மீட்ட தந்தை பெரியாரின் வழியில், மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது. நூறாண்டுகள் கடந்தாலும் நமக்கான போராட்டங்கள் தொடர்கின்றன. தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் போராடுவோம்! அவர்களைப் போலவே வெற்றி காண்போம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!