அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் முதலமைச்சரின் அறிவிப்புகள்!- சிபிஎம் வரவேற்பு!

ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் 9 அறிவிப்புகள் வெளியிட்டு இருப்பது, பல்லாண்டுகளாக போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இவை நம்பிக்கையூட்டும் அறிவிப்புகளாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு அளித்துள்ளது.இது குறித்து, மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேரவை விதி எண் 110-ன் கீழ், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் 9 அறிவிப்புகள் வெளியிட்டு இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. பல்லாண்டுகளாக போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இவை நம்பிக்கையூட்டும் அறிவிப்புகளாகும்.கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட விடுப்பு நாட்களை 15 நாட்கள் வரை சரண்டர் செய்து 1.10.2025 முதல் பணப்பயன் பெற்றுக்கொள்ள வழிவகை, 1-1-2025 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பது போல தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோருக்கும் 2 சதவிகித அகவிலைப்படி உயர்வு, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான பண்டிகைக்கான படி ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் ஆக உயர்வு, அரசுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1 லட்சமாகவும், கலை – அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ரூ.50 ஆயிரமாகவும் உயர்வு, அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்வு, பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு 1-7-2024 முதல் ஓராண்டாக உயர்வு, மகப்பேறு விடுப்பு காலமும் தகுதிகாண் பருவம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுதல் ஆகியன தமிழ்நாடு முதல்வரால் அறிவிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்க அறிவிப்புகளாகும்.பழைய பென்சன் திட்டம் மீட்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு தனது அறிக்கையை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய பரிந்துரை அளிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே உள்ள கால வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் வரையறுக்கப்பட்ட பயனைக் கொண்ட பழைய பென்சன் திட்டம் அமலாக்கப்படுவதே பொருத்தமாக, நல்லதொரு தீர்வாக இருக்கும். ஏற்கனவே சில மாநிலங்களில் பழைய பென்சன் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டு பயன்கள் வழங்கப்பட்டு வருவதை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.சத்துணவு ஊழியர்களின் காலவரைமுறை ஊதிய கோரிக்கை, அதிமுக ஆட்சி காலத்தில் பழிவாங்கப்பட்ட சாலைப் பணியாளர்களின் போராட்ட காலத்தை பணிக் காலமாக வரைமுறைப்படுத்தல் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்பட வேண்டும். அரசு ஊழியர், ஆசிரியர் காலிப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட வேண்டும். இவர்களோடு போக்குவரத்து ஓய்வூதியர் அகவிலைப்படி பிரச்சனையையும் அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் நீண்ட காலமாக போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் பறிக்கப்பட்ட பயன்கள் அனைத்தும் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மீட்டுத் தருவது அரசு நிர்வாகத்தை செம்மையாக நடத்துவதில் அவர்களை உணர்வுப்பூர்வமாக ஈடுபடுத்த உதவுமென்பதை சுட்டிக் காட்டுகிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!