திருச்சியில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக உதவியாளர் அதிரடி கைது..

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக உதவியாளர்  அதிரடி கைது..

திருச்சி மாவட்டம், சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் தங்கையன் மகன் அந்தோணி (வயது 46). இவர் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை புதிய கட்டிடங்களுக்கு ஒப்பந்த முறையில் செய்து கொடுத்து வருகிறார். அந்த வகையில், திருச்சி கிராப்பட்டியில் உள்ள ஒரு வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை செய்து கொடுக்க ஒப்பந்தம் செய்து கொண்டு அதற்கான வேலைகளை செய்து வந்தார். அந்த வீட்டிற்கு முன்பு உயர் மின்னழுத்த கம்பம் ஒன்று இடையூறாக இருப்பதால் அந்த கம்பத்தை சற்று தள்ளிப் போடுவதற்கு கிராப்பட்டியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவி செயற் பொறியாளர், இயக்கலும் காத்தலும், மின் பகிர்மான மற்றும் உற்பத்தி கழகம் அலுவலகத்தை அணுகி அங்கிருந்த வணிக உதவியாளர் அன்பழகன் என்பவர் கூறியதன் பேரில், ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தியுள்ளார்.

அதன் பிறகு மின்சார வாரியம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள வணிக உதவியாளர் அன்பழகன் என்பவர் இடத்தினை பார்வையிட்டு எஸ்டிமேட் தயார் செய்து கொடுத்துவிட்டு 35 ஆயிரம் ரூபாய் ஆன்லைனில் கட்டணம் செலுத்துமாறு அந்தோணியிடம் கூறியுள்ளார். அதன் பேரில் அந்தோணி உயிர் மின்னழுத்த கம்பத்தை மாற்றி அமைப்பதற்கு 35 ஆயிரம் கட்டணம் ஆன்லைன் மூலம் 15.4.2024 அன்று செலுத்திவிட்டு அதன் ரசீதினை, எடுத்துக் கொண்டு வணிக உதவியாளர் அன்பழகனிடம் கொடுத்துள்ளார். அதற்கு அன்பழகன் ஒரு மாதம் கழித்து தன்னை வந்து பார்க்க வேண்டுமாறு கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்தோணி (27.5.2024) அன்று காலை சுமார் 11.30 மணி அளவில் மேற்படி அன்பழகனை கிராபட்டியில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து மின் கம்பம் மாற்றம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு அன்பழகன் உங்க வேலை முடிக்க வேண்டுமென்றால் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தீர்கள் என்றால் சீக்கிரமே முடித்துக் கொடுப்பேன் என்று கூறியுள்ளார். அதற்கு அந்தோணி தன்னால் அவ்வளவு தொகை தர இயலாது என்று கூறியதன் பேரில் அன்பழகன் ஐந்தாயிரம் குறைத்துக் கொண்டு, ரூ.15 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே உங்களது வேலையை முடித்து தர முடியும் என்று கண்டிப்பாக கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்தோணி திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு வந்து காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டனிடம் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின்படி ரசாயனம் பவுடர் தடவியே ரூ‌.15 ஆயிரம் லஞ்சப் பணத்தை அந்தோணியிடம் கொடுத்து அனுப்பினர். பிறகு (28.5.2024) நேற்று காலை 11 மணியளவில் அந்தோணியிடமிருந்து அன்பழகன் லஞ்சமாக ரூ.15,000 பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். பின்னர் அன்பழகன் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் நீதிமன்ற காவல் சிறையில் அடைத்தனர். மேலும் திருச்சி மாவட்டம், கிராப்பட்டி உதவி செயற்பொறியாளர் அலுவலகம், இயக்கலும் காத்தலும், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிரமான கழகம், கிராப்பட்டி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!