மேலப்பாளையம் குறித்து அவதூறு! -திமுக எம்.எல்.ஏ. டாக்டர் பூங்கோதை ஆலடி அருணாவுக்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம்! இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தென்காசி மாவட்டம் கடையநல்லூரிலிருந்து நெல்லை டவுன் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உறவினர் ஒருவரின் இறுதி சடங்கிற்கு சென்று வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களை அனுமதி பெறாமல் வாகனத்தில் சென்று வந்ததாகக் கூறி, காவல்துறை கைது செய்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அவர்களை ஆலங்குளம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் தனிமைப்படுத்த அதிகாரிகள் அவர்களை அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், நெல்லை டவுன் அருகே உள்ள கிராமத்துக்கு சென்றவர்களை மேலப்பாளையத்திற்கு சென்று வந்துள்ளதாகவும், அவர்களை தங்கள் பகுதியில் தனிமைப்படுத்தக் கூடாது எனவும், எப்படி அவர்கள் மேலப்பாளையம் செல்லலாம் அவர்களை சிறையில் அடையுங்கள் என்று மிகவும் அவதூறாக அநாகரீகமான முறையில் பேசி சாலையில் மக்களை திரட்டி போராடியுள்ளார் ஆலங்குளம் திமுக எம்.எல்.ஏ. டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா அவர்கள்.
திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா அவர்களின் இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது.
கொரோனா என்பது ஒரு நோய். அது சாதி மதம் இனம் பார்த்து வருவதில்லை. ஒட்டுமொத்த சர்வதேச உலகமும் கொரோனாவை அப்படித்தான் அணுகுகின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும் தான் சங்கபரிவார் சக்திகள் அதனை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைத்து பொய் செய்திகளையும், அவதூறுகளையும் பரப்பினர். அதன் காரணமாக குறிப்பிட்ட சிறுபான்மை சமூக மக்கள் வாழும் பகுதிகள் தீண்டத்தாகாத பகுதிகளாக திட்டமிட்டே பிரச்சாரம் செய்யப்பட்டன. அந்த வகையில் மேலப்பாளையமும் அவதூறுகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த அவதூறுகளை முறியடித்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பெரும்பாலோர் தொற்று இல்லை என்று சான்றளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். எனினும் அரசின் நடவடிக்கைகளுக்கு மேலப்பாளையம் பகுதி மக்கள் தற்போது வரை முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
இந்த சூழலில் மேலப்பாளையம் வராத நபர்களை வந்ததாக அவதூறு பரப்பியும், அங்கு சென்று வந்தாலே அவர்கள் மூலம் கொரோனா பரவிவிடும் என்பது போல மருத்துவரான ஆலங்குளம் எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா அவர்கள் மக்களை தூண்டிவிட்டு நடந்துகொண்ட விதம் முகஞ்சுழிக்க வைக்கிறது.
திராவிட இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் அதிலும் மருத்துவராக இருக்கும் டாக்டர் பூங்கோதை அவர்களின் இந்த செயல் ஏற்புடையதல்ல. இதுபோன்ற விசயங்களில் மக்களை ஆசுவாசப் படுத்தி கருணையுடன் நடந்துகொள்ள வேண்டிய ஒரு சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவரான அவர் வீதியில் இறங்கி இப்படி நடந்துகொள்வார் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது மக்களை திரட்டி, குறிப்பிட்ட பகுதி மக்களின் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய எம்.எல்.ஏ. டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் திமுக தலைமையும் அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு இறப்பு நிகழ்வுக்கு சென்று வந்த நிகழ்வை பூதாகரமாக்கிய இந்த விவகாரத்தில் தவறிழைத்த அனைவரும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். கடையநல்லூரை சேர்ந்தவர்களை அங்கேயே தனிமைப்படுத்தாமல் அங்கிருந்து பாவூர் சத்திரம், ஆலங்குளம் கொண்டு வரவேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது. இந்த பிரச்சினை இந்த அளவுக்கு பரபரப்பாக ஆவதற்கு தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஆகவே இந்த விவகாரத்தை தவறான முறையில் கையாண்ட அதிகாரிகள் மீதும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









