திருவள்ளுவர் படம் சர்ச்சை.? உண்மை புகைப்படம் எது.?  ஒர் ஆய்வு.!

நீண்ட தாடி, கையில் எழுத்தாணி, குடுமி வைத்த தலை, மரப் பலகையில் அமர்ந்திருக்கும், முனிவர் போன்ற தோற்றம் கொண்டவர் தான் திருவள்ளுவர். நாம், சிறு வயதில் இருந்து பார்த்துப் பழகிப் போன, இந்த உருவம் உண்மையானதல்ல.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, உலகப் பொது மறையான திருக்குறளை இரண்டு அடிகளில் இயற்றியவர், இந்த திருவள்ளுவர். இவர் சமணர் என்ற கூற்றும், ஆய்வாளர்களிடையே பரவலாக இருந்து வருகிறது.

இந்த திருக்குறளை மொழி பெயர்த்தவர் பரிமேலழகர். அதன் பிறகு தான், திருக்குறள் தமிழகத்தில் பிரபலமாக வேரூன்றத் துவங்கியது. இன்று, நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் நிறைந்து விட்ட, திருக்குறளையும், திருவள்ளுவரையும் நாம் எப்போதும் மறக்க முடியாது.

பேருந்துகளில், பள்ளிகளில், நம் பாடப்புத்தகங்களில்….அரசு அலுவலகங்களில், கோயில்களில் என, அவரது உருவம் எங்கும் வியாபித்திருக்கிறது.

ஆனால் இந்த திருவள்ளுவரின் உருவத்தை வரைய 38 ஆண்டுகள் ஆகியிருக்கிறது, என்று சொன்னால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?

சேலம்… காமாட்சிப்பட்டி என்ற ஊரில் தான், வேணுகோபால் சர்மா என்பவர் வசித்து வந்தார்.

இவருக்கு சிறு வயதிலேயே, நோய்த் தாக்கம் இருந்தது. இதனால், வீட்டில் இருந்தபடியே, கல்வி, ஓவியம், இசை, நாட்டியம் என பல கலைகளைக் கற்றுத் தேர்ந்தார்.

இவருக்கு மிகவும் பிடித்தது, ஓவியம் வரைவது தான். ராஜாஜியுடன் நட்பாகப் பழகியதால், 1937-ஆம் ஆண்டு, சேலத்திற்கு காந்தி வந்த போது, காந்தியை தத்ரூபமாக வரைந்து, அவருக்கு பரிசாக வழங்கினார்.

தனது 12-வது வயதில் இருந்து, திருவள்ளுவர் எப்படி இருந்திருப்பார்? என்று தோன்றியது. பல நுாற்றுக் கணக்கான ஓவியங்கள் வரைந்தார். எதிலும், அவருக்கு பிடித்தமான, திருவள்ளுவர் என்று நம்பும்படியான ஓவியம் ஏதும் அமையவில்லை.

இதனைச் சவாலாக எடுத்துக் கொண்டு, 38 ஆண்டுகள் ஆயிரக் கணக்கில் ஓவியங்களை வரைந்து தள்ளினார். ஆனால், எதிலும் அவர் திருப்தி அடையவில்லை. பிறகு, 1964-ஆம் ஆண்டில் தான், திருவள்ளுவரை, கற்பனையில் நிறுத்தி ஒரு ஓவியம் வரைந்தார்.

அது தான், நாம் தற்போது காணும் திருவள்ளுவரின் உருவம். இதை வரைந்து முடித்த பிறகு தான், அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும், என்ற ஆர்வம் ஏற்பட்டு, அதன் பிறகு தான் திருமணமே செய்து கொண்டார்.

திருவள்ளுவரை வரைவதற்காக தனது இளமை வாழ்வையே துறந்தவர் வேணு கோபால் சர்மா.

இதுதான் தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே திருவள்ளுவர் படம்.

(இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படமும் இதுதான்.)

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!