திருப்பூர் அருகே பயங்கரம்: விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரி வெட்டிக் கொலை..

திருப்பூர் அருகே விசாரணை நடத்த சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல்(வயது 52) செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா குடிமங்கலம் பகுதியில் மூங்கில் தொழுவு கிராமத்தில் மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில், மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டியன் ஆகியோர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தங்கபாண்டியன் தனது தந்தை மூர்த்தியைக் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் காவல் அவசர உதவி எண் 100 -க்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த சண்முகவேல், மோதலை தடுத்து காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன், அரிவாளால் சண்முகவேலை வெட்டியுள்ளார். உடனிருந்த ஓட்டுநரையும் வெட்டுவதற்காக தங்கபாண்டியன் துரத்திய நிலையில், அவர் தப்பித்து காவல் நிலையத்துக்கு சென்று தகவல் கொடுத்துள்ளார்.

ஆனால், குடிமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள் சண்முகவேல் உயிரிழந்துவிட்டார். அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய தங்கபாண்டியனை தேடுவதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!