திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது செல்லும்… ஒவ்வொரு கார்த்திகையிலும் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் – உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பு..

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியலுக்காக எந்த மாநிலமும் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து செயல்படக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வின் தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இரு நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வு இன்று காலை தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

நீதிபதிகள் உத்தரவில் முக்கியமானவை:

திருப்பரங்குன்றத்தில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்றால் அதற்கு தமிழக அரசே காரணம்.

கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவது பொது அமைதியை சீர்குலைக்கும் என்பது அபத்தமானது.

அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு செயல்பட்டுள்ளது.

அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற எந்த மாநிலமும் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து செயல்படக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்.

சட்டம் – ஒழுங்கு பிரச்னை என்பது அதிகாரிகள் தங்களின் வசதிக்காக உருவாக்கிய கற்பனை காரணம்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத் தூண் தர்காவுக்கு சொந்தமானது என்ற வாதம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

தீபத் தூண் கோயில் நிர்வாகத்துக்கே சொந்தமானது.

கார்த்திகை தீபமானது மலை உச்சியில் இருக்கும் தீபத் தூணில் கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும்.

தீபம் ஏற்றும் நிகழ்வின்போது கோயில் நிர்வாகத்துடன் செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை.

நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ஹிந்து மற்றும் முஸ்லிம் பண்டிகைகளின்போது இரு தரப்பினரும் ஒருவரைக்கொருவர் தொந்தரவு செய்யாமல் அவரவர் பண்டிகையை கொண்டாடிக் கொள்ளலாம்.

தனி நீதிபதி சுவாமிநாதனின் அனைத்து உத்தரவுகளும் செல்லும்.

இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் முடித்துவைத்தது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!