திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியான குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்! ஒருவருக்கு தேவஸ்தானத்தில் வேலை! அதிகாரிகள் சஸ்பெண்ட்! சந்திரபாபு நாயுடு அதிரடி..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனத்திற்கான இலவச டோக்கன் விநியோகிக்கும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பார்கள் அதற்கு ஏற்றார் போல  உலக புகழ்பெற்ற இக்கோவிலில் தினமும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறிவித்திருந்தது. இதற்காக பல்வேறு இடங்களில் 90 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. டோக்கன் இன்று காலை 5 மணி முதல் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் புதன்கிழமை இரவு இலவச தரிசன டிக்கெட்டை பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் திரண்டிருந்தனர்.அப்போது விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் கூட்டம் அதிகம் இருந்தது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 2 பெண்கள் அடங்குவர். மேலும்,30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு கேட்ட நிலையில் தற்போது நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு தேவஸ்தானத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த 2 பேருக்கு தலா ரூ.5 லட்சம், காயமடைந்த 33 பேருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.  திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும். டிஎஸ்பி உள்பட காவல் அதிகாரிகள் 2 பேர் மற்றும் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி, தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!