இந்தியாவில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு அடுத்த வாரம் ஆலோசனை நடத்தவுள்ளது.
இந்தியாவில் 2006ல் கொண்டு வரப்பட்ட குழந்தைகள் திருமண தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வயதிற்கு கீழ் திருமணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.
இதையடுத்து ஆண்களைப் போல பெண்களின் திருமண வயதையும் 21 ஆக உயர்த்தும் பொருட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த திருத்த மசோதா ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்த ஆய்வுகள் இன்னும் முடியாத நிலையில் 17-வது மக்களவை காலாவதியானது.
தற்போது மத்தியில் புதிய அமைச்சரவை உள்ள நிலையில், மீண்டும் இந்த விவகாரத்தை நாடாளுமன்ற நிலைக்குழு கையில் எடுக்கிறது.
வருகிற நவம்பர் 22 ஆம் தேதி இதுகுறித்த முக்கிய ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தேசிய பெண்கள் ஆணையம், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மத்திய குழந்தைகள் தத்தெடுப்பு வள ஆணையம், தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் , இளம் வயதினருக்கான தேசிய கூட்டமைப்பு (என்சிஏஏசி) இளம் தலைமுறையினருக்கான அமைப்புகள் என முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
திருமண வயது, பெண்களுக்கான பிற சட்டங்கள், குழந்தைகளின் கல்வி, இளம் வயதினர் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
மசோதா காலாவதியாகிவிட்டாலும், பிரச்சனையை மீண்டும் எடுத்துக்கொள்வதில் எந்த தடையும் இல்லை என குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்க உள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர், கல்வி அமைச்சகம், பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் இதுகுறித்து கேட்க உள்ளது.
சமக்ரா சிக்ஷா அபியான் போன்ற பல்வேறு திட்டங்கள், என்சிஇஆர்டி, கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி போன்ற தன்னாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் பள்ளிக்கல்வித் துறையால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் செயல்திறன் குறித்தும் செயலாளர் விளக்கம் தெரிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.