திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
விரல் ரேகைகளின் ஆச்சரியம்..
அத்தியாயம் 9
“அவ்வாறில்லை!அவனது விரல்நுனிகளையும்
சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்”.
(அல்குர்ஆன் 75:4)
மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன்,விரலின் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்றும் கூறுகிறான். உடலில் ஏராளமான உறுப்புகள் இருக்கும் போது, விரலின் நுனிகளை இறைவன் குறிப்பிட்டு சொல்ல என்ன காரணம் என்று ஆராயும்போது பல ஆச்சரியங்கள் கிடைக்கின்றன.மனிதனின் பல உறுப்புகளும், முகஅமைப்புகளும், ஒத்திருக்கும் மனிதர்களை நம்மால் காணமுடியும். சில சமயங்களில் இரட்டையர்களானால், அவர்களின் உறவினர்களே அவர்களை அடையாளம் காணுவதில் தடுமாறும் சூழலை காணுகிறோம். ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் கைவிரல் ரேகை நிச்சயமாக ஒன்றுபோல் இருக்காது. ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி விரல் ரேகைகள் இருக்கும் என்பதும்,இந்த ரேகைகளைக்கூட மீண்டும் கொண்டு வந்து விடுவோம் என்று இந்த திருக்குர்ஆன் வசனம் கூறுகிறது. இன்றைய விஞ்ஞானத்தின் செய்திகளும், இதனை உண்மைப் படுத்துகின்றன. குற்றவாளிகளின் சில உறுப்புகளை அடையாளமாக வைத்து, குற்றவாளிகளை அடையாளம் (Identify) கண்டுள்ளனர். சிறையில் நடத்தப்படும் அடையாள அணிவகுப்பு மூலம் இதனைக் காணலாம். பிறகு குற்றவாளிகளின் உயரம், உடல்பருமன், கைகளின் நீளம், விரல்களின் நீளம்,முக அமைப்பு இவைகளை வைத்து குற்றப்பட்டியல் தயார்படுத்தி வைத்து இருந்தனர். அப்போது ஒரு வெளிநாட்டு அறிஞர் விரல் ரேகை பதிவு முறையை அமல்படுத்தினார். ஒரே கையில் உள்ள ஐந்து விரல்களின் பதிவும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இரட்டையர்களாக இருந்தாலும், அவர்களின் விரல்களின் ரேகைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. தீயில் விரல்கள் பாதிக்கப்பட்டாலும், தோல்கள் மீண்டும் வளரும் போது ஏற்கனவே இருந்த ரேகைகள் மீண்டும் உருவாகிறது. இடதுகை பெருவிரலை நாம் பெரும்பாலும் பயன் படுத்துவதில்லை. ஆகவே இடது பெருவிரல் ரேகை தெளிவாக இருப்பதால் இடதுகை பெருவிரல் ரேகையை பதிய செய்கிறார்கள். பாஸ்போர்ட், மற்றும் அரசு அலுவலக வேலைகளுக்கு பத்து விரலின் ரேகைளையும் பதியச் செய்கிறார்கள். போலி ரேகைகளை உருவாக்க முடியாது. உருவாக்கினாலும் நிபுணர்கள் அதை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். உலக அளவில் தமிழகத்தில்தான் 1895 ஆம் ஆண்டு முதன்முதலாக விரல்ரேகைப்பிரிவு துவங்கப்பட்டது. தேசிய அளவில் விரல்ரேகை பிரிவுகளை ஒன்றிணைத்தால், தேசிய அளவில் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு விடலாம். அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. உலக அளவில் விரல் ரேகை பதிவில் பல புதிய உத்திகள் கையாளப் படுகின்றன. பண்டைய பாபிலோனியர்கள் தங்களின் கொடுக்கல் வாங்கலுக்கு தங்கள் விரல் பதிவுகளை களிமண்ணில் பதிந்தனர். பண்டைய சீனர்கள் மைதடவி தங்கள் ரேகைகளை பதிவு செய்தனர். சர் பிரான்சிஸ் ஹேல்டன் என்பவர் உலகிலுள்ள சுமார்8000 விரல் ரேகைகளை சேகரித்து ஆய்வு செய்தார். 1892ஆம் ஆண்டு பிங்கர்பிரிண்ட்ஸ் (Finger prints)என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதில் விரல்ரேகைகளின் வளைவுகள், துளைகள், அலைகள் என மிகவிரிவாக விரல்ரேகைகளின் விபரங்கள் வகைப்படுத்தினார். இதில் ஒரு மனிதனின் ரேகைபோல மற்றொரு மனிதனின் ரேகை இருக்காது என்று உறுதிப்பட கூறப்பட்ட கூற்று மேலுள்ள திருக்குர்ஆன் வசனத்தை உண்மைப் படுத்துகிறது.
திருக்குர்ஆன் ஒளியில் விஞ்ஞானம்…!நாளை ஒரு புதிய செய்தியை ஆராய்வோம்..!
“கப்ளிசேட்”


You must be logged in to post a comment.