திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
அணு ஆயுதங்கள்..!
அத்தியாயம் 45
யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? அவர்களுக்கு எதிராகப் பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.
(திருக்குர்ஆன் 105:1,2,3,4,5)
இன்றைக்கு உலகையே அச்சத்தில் உறைய வைக்கிற ஒரு ஆயுதம் என்றால் அது அணு ஆயுதம்தான்.
எந்த நாடுகள் அதிக அணு ஆயுதங்களை வைத்துள்ளதோ, அந்த நாடே மிக வலிமையான நாடாக கணக்கில் கொள்ளப்படும். யுரேனியம் அல்லது புளூட்டோனியம் ஆகிய கனமான தனிமங்களின் அணுக்கருவை பிளப்பதன்(பிளவு) மூலம் உருவாக்கப்படுவதை (Fission weapons) “அணுகுண்டு”(Atomic Bomb) என்று கூறப்படுகிறது. அல்லது இணைப்பதன் (இணைவு )மூலம் மிக அதிக ஆற்றலை வெளியிடும் ஆயுதங்களை (Fusion weapons) என்றும், இவைகளையே “ஹைட்ரஜன் பாம்” (Hydrogen Bomb), அல்லது “வெப்ப அணு ஆயுதம்” (Thermo nuclear weapons) என்றும் கூறப்படுகிறது. ஹைட்ரஜன் குண்டுகள், அணுகுண்டு களைவிட அதிகம் சக்திவாய்ந்த ஆயுதங்களாகும். Tactical nuclear weapons என்னும் அணு ஆயுதங்கள் சிறிய அளவிலான குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களாகும். Strategic Nuclear weapons என்பவை பெரிய அளவிலான நீண்ட இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை. பொதுவாக அணு ஆயுதங்கள் வெளியே ஒரு உலோக உறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும். உள் அமைப்பில் பிளவு/ இணைவுப் பொருட்கள் , வெடிப்பை உருவாக்கத் தேவையான வெடிமருந்துகள், ஆகியவைகளை உள்ளே கொண்டிருக்கும். வடிவத்தில் உருண்டை அல்லது நீள் உருண்டையாக இருக்கலாம். சாதுவாக தோன்றும் அது வெடிக்கும் போதே பேரழிவைத்தரும் ஒளி, அதிகவெப்பம்,(சூரியனை விட வெப்பம்) அதிர்ச்சி அலைகள் மற்றும் கதிர்வீச்சை உமிழும். 1945 ஆகஸ்ட் 6 ம்தேதி அமெரிக்கா, ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அடுத்தடுத்து அணுகுண்டை வீசிய போதுதான் உலகமே அதன் தாக்கங்களையும், அழிவுகளையும், கண்டு உறைந்து போனது. உலகில் அணு ஆயுதங்களை வைத்துள்ள ரஷ்யா (5580), அமெரிக்கா (5044),சீனா(500), ஃபிரான்ஸ் (290), இங்கிலாந்து (225), இந்தியா (172), பாகிஸ்தான் (170), இஸ்ரேல் (90), வடகொரியா (50) என்று தங்களின் அணு ஆயுதங்களை வெளிப்படையாகக் கூறினாலும், உண்மையான அணுஆயுத பலம் யாருக்கும் தெரியாது. இதுவரையில் உலகிலுள்ள அணு ஆயுதங்கள், அதன் இயக்கங்கள் மற்றும் அழிவுகளை நாம் யோசிக்கிற போது, அன்றைய கஃபா ஆலயத்தை தாக்க வந்த யானைப்படை அழிக்கப்பட்ட வரலாறு நம் நினைவுகளில் நிழலாடுகிறது. இன்றைக்கு அணு ஆயுதங்களை ஏவுவதற்கான பல நவீன ஏவுகணைகளும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் என அணு ஆயுதங்களை ஏவ வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் கவச வண்டிகள், அணு ஆயுத ஏவுகணைகள் என அணு ஆயுதங்களை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. இப்படி ஒரு தாக்குதல் நிகழ்வு அன்றைய மக்கமாநகரில் நடந்தது. உலகில் முதல் முதலாக கட்டப்பட்ட கஃபா ஆலயத்திற்கு வந்து செல்லும் மக்களின் கூட்டத்தைக் கண்டு பொறாமை கொண்ட எத்தியோப்பியா பேரரசின் கீழ் ஏமனில் ஆட்சி செய்த கிறிஸ்தவ மன்னனான ஆப்ரஹா, கஃபா ஆலயத்தை இடித்துவிட மிகப்பெரிய யானைப் படையுடன் வந்தான். இந்த நிகழ்வு பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறந்த ஆண்டு அல்லது சற்று முந்தைய ஆண்டுகளில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மன்னனின் யானைப்படை கஃபா ஆலயம் அருகில் வந்தது. உடனே வானத்தில் ஒருவகை பறவைக்கூட்டம் வட்டமிட ஆரம்பித்தது. அந்தப் பறவைகள் தனது அலகுகளில் அதிக வெப்பமுடைய கற்களை தாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
திருக்குர்ஆனும் சூடேற்றுப்பட்ட கற்கள் என்று கூறுகிறது. அபாபீல் பறவைகள் தங்கள் அலகுகளில் தாங்கி வந்த இந்தக் கற்களில் வெளிப்படையான வெப்பம் இருக்க வாய்ப்பில்லை.
ஆனால் அந்தக் கற்களுக்குள் கடுமையான வெப்பமும், அழிக்கும் பொருளும் இருந்திருக்க வேண்டும்.
இந்தக்கற்கள் யானைகள் மீது பொழியப்பட்டபோது, யானைகளை கூழாக ஆக்கி விட்டது எனில் அந்த கற்கள் கீழே விழுந்த போதுதான் அது தனது வெப்பத்தை ஆற்றலை வெளிப்படுத்தி இருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
தரையில் இருந்து இது வீசப்பட்டால் தரையில் வீசுபவரும் பாதிக்கப்படுவார்.
ஆனால் மேலிருந்து வீசும்போது கீழுள்ள பொருட்களே அழிவை சந்திக்கும். அதுபோலவே யானைப் படைகள் முழு அழிவை சந்தித்தது.
இன்றைக்கு உலகம் முழுவதும் எல்லா நாடுகளிடமும் சேர்த்து 12,331 அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அன்றைக்கு வான வீதியில் வட்டமிட்ட ஆயிரக்கணக்கான அபாபீல் பறவைகளின் அலகுகளில் இருந்த சூடேற்றப்பட்ட கற்களின் இயல்புகளும், அவைகள் உருவாக்கிய அழிவும்,
இன்றைய அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதற்கான திருக்குர்ஆன் தரும் ஆச்சரியமான முன்னோட்டமான செய்தி என்று புரிந்து கொள்ள முடிகிறது.
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! நாளை வேறொரு செய்தியை ஆராய்வோம்..!
‘கப்ளிசேட்’

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









